இதோ ஆரம்பிச்சிட்டாருல்ல; கார்ப்பரேட்டுகளுக்கான வரி குறைப்பு;டிரம்ப் அறிவிப்பு
இதோ ஆரம்பிச்சிட்டாருல்ல; கார்ப்பரேட்டுகளுக்கான வரி குறைப்பு;டிரம்ப் அறிவிப்பு
UPDATED : டிச 13, 2024 08:59 AM
ADDED : டிச 13, 2024 08:32 AM

வாஷிங்டன்: 'கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரி, 21 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்கப்படும்' என்று அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற குடியரசு கட்சியின் வேட்பாளர் டிரம்ப், வரும் ஜன.,20ம் தேதி அதிபராக பொறுப்பேற்க இருக்கிறார். இவரது ஆட்சி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.
அந்த வகையில், பதவியேற்புக்கு முன்பாக கார்ப்பரேட்களுக்கு நல்ல செய்தியை டிரம்ப் வெளியிட்டுள்ளார். அதாவது, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கான வரியை 21 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது; மற்ற நாடுகளில் இல்லாத வகையில் கார்ப்பரேட்களுக்கு சலுகை வழங்க முடிவு செய்துள்ளோம். உங்களுக்கான வரி சதவீதத்தை குறைக்க முடிவு செய்துள்ளோம். உத்தேசமாக 42 அல்லது 44ஆக இருந்த வரி 21 சதவீதமாக குறைக்கப்பட்டது. தற்போது, யாரும் நம்ப முடியாத வகையில், அதனை 15 சதவீதமாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதுவும் உங்களின் தயாரிப்புகளை அமெரிக்க மண்ணில் மேற்கொண்டால் மட்டுமே இந்த சலுகையை பெற முடியும்.
மீண்டும் அமெரிக்காவில் தொழில் தொடங்க வருபவர்களுக்கு சலுகைகள் வழங்குவோம். யாரிடமும் இல்லாத எண்ணெய் மற்றும் கேஸ் நம்மிடம் உள்ளது. என்னுடைய முதல் பதவி காலத்திலேயே முதலிடத்திற்கு கொண்டு வந்தேன். மீண்டும் முதலிடத்திற்கு செல்லப் போகிறோம். உற்பத்தியைப் பொறுத்தவரை, நாங்கள் முதலிடத்தில் இருக்கப் போகிறோம்.
இது எல்லாம் நடக்கும் போது விலைவாசி குறையும். விரைவில் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை மக்கள் வாங்கலாம், எனக் கூறினார்.