வங்கக்கடலில் சீனக்கப்பலுக்கு என்ன வேலை? பிரெஞ்சு நிறுவனம் ஆய்வில் அம்பலம்!
வங்கக்கடலில் சீனக்கப்பலுக்கு என்ன வேலை? பிரெஞ்சு நிறுவனம் ஆய்வில் அம்பலம்!
ADDED : ஜூலை 11, 2025 01:10 PM

புதுடில்லி: வங்காள விரிகுடா கடலில் சீன உளவு கப்பல் கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதாக, பிரெஞ்சு நிறுவனம் தகவல் வெளியிட்டு உள்ளது.
பிரெஞ்சு கடல்சார் புலனாய்வு நிறுவனம், கடல்களில் கப்பல்களை கண்காணிக்கும் பணி செய்து வருகிறது. இந்த நிறுவனம் செயற்கைகோள்களை பயன்படுத்தி, கப்பல்களின் இயக்கத்தை கண்காணித்து வருகிறது. அந்த வகையில், வங்காள விரிகுடா கடலில் இந்த நிறுவனம் ஆராய்ச்சி செய்துள்ளது. அப்போது தான், சீனாவில் சதி செயல் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
சீன உளவு கப்பல் இந்தியா மற்றும் இலங்கைக்கு அருகே பல நாட்களாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளது. இந்த உளவு கப்பல் ரோந்தில் ஈடுபட்டு வருவதை யாருக்கும் தெரியாத வகையில், இருப்பிடத்தை காட்டும் கருவியை சுவிட்ச் ஆப் செய்துவிட்டதாக பிரெஞ்சு நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தான், வங்காள விரிகுடா கடலில் சீன கப்பலுக்கு என்ன வேலை என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.
இது குறித்து பிரெஞ்சு நிறுவனம் கூறியதாவது: இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை இந்திய கடல் பகுதியைச் சுற்றியுள்ள போக்குவரத்தை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. எங்கள் அமைப்புகள் பல நாட்களுக்கு அதன் இயக்கத்தை கண்காணிக்க முடிந்தது.
எங்களது நோக்கம் கடல் போக்குவரத்து வழித்தடங்களை அடையாளம் காண்பது. கடந்த சில ஆண்டுகளாக சீன ஆராய்ச்சி கப்பல்கள் தொடர்ந்து ஆய்வு நடத்தி வருகிறது. சீனக் கப்பல் காஸ்டர்ன் இந்திய கடற்கரையிலிருந்து சற்று தொலைவில் சர்வதேச கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுகிறது. இவ்வாறு பிரெஞ்சு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மூத்த அதிகாரிகள் கூறியதாவது: வங்கக்கடலில் சீன கப்பல் ஆய்வு நடத்தும் பின்னணி சந்தேகத்தை எழுப்புகிறது. இந்த செயல்பாடு, சீன-வங்கதேச உறவுகள் வளர்ந்து வருவதை குறிக்கிறது. இந்த சீன ஆராய்ச்சி கப்பல் உளவு தகவல்களை சேகரிக்கும் நோக்கத்துடன் செயல்பட வாய்ப்புள்ளது என்று நாங்கள் சந்தேகிக்கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.