UPDATED : ஜன 10, 2025 03:09 PM
ADDED : ஜன 10, 2025 12:06 AM

துபாய் :நம் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி தலைமையிலான அதிகாரிகள் குழு, ஆப்கன் வெளியுறவுத் துறையின் இடைக்கால அமைச்சர் மவ்லவி அமீர்கான் முத்தாக்கியை துபாயில் சந்தித்து, பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தனர்.
தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபான் அரசுக்கும், நம் வெளியுறவுத் துறைக்கும் இடையிலான உயர்மட்ட கூட்டம், மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் நேற்று முன்தினம் நடந்தது.
இதில், நம் வெளியுறவுத்துறை செயலர் விக்ரம் மிஸ்ரி மற்றும் மூத்த அதிகாரிகள் குழு பங்கேற்றது. ஆப்கன் தரப்பில் அந்நாட்டு வெளியுறவுத்துறையின் இடைக்கால அமைச்சர் மவ்லவி அமீர்கான் முத்தாக்கி, அதிகாரிகள் குழுவுடன் பங்கேற்றார்.
இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் பொருட்கள், மேற்காசிய நாடான ஈரானில் உள்ள சபாஹர் துறைமுகம் வழியாகவே ஆப்கனை அடைகிறது. எனவே, தேசிய நலன் சார்ந்த சபாஹர் துறைமுக பயன்பாட்டை அதிகரிப்பது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
மேலும், மனிதாபிமான உதவிகள், வளர்ச்சிப் பணிகளுக்கான உதவிகள், வர்த்தகம், விளையாட்டு, கலாசார உறவுகள், பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது முக்கிய அம்சமாக விவாதிக்கப்பட்டது. இந்த சந்திப்பின்போது, சுகாதாரத்துறை, மருந்து வினியோகம், அகதிகளின் மறுவாழ்வு உதவிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என, ஆப்கனுக்கு நம் வெளியுறவுத்துறை உறுதி அளித்தது.
ஆப்கன் மக்களுக்கு தொடர்ந்து ஆதரவும், உதவிகளும் அளித்து வரும் இந்தியாவுக்கு, அந்நாட்டு அமைச்சர் அமீர்கான் பாராட்டு தெரிவித்தார். ஆப்கனுக்கு தேவையான பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை நிறைவேற்றித் தர இந்தியா தயாராக இருப்பதாக நம் அதிகாரிகள் தரப்பு உறுதி அளித்தது.
இந்தியாவின் பிராந்திய பாதுகாப்புக்கு முழு ஒத்துழைப்பு தர தயாராக இருப்பதாக ஆப்கன் அமைச்சர் உறுதி அளித்தார்.
ஆப்கானிஸ்தான் நிர்வாகம், தலிபான் அமைப்பினரின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தபின், அந்த நாட்டு பிரதிநிதிகளுடன், நம் நாட்டு பிரதிநிதிகள் அதிகாரப்பூர்வமாக நடத்திய முதல் ஆலோசனை கூட்டம் இது.

