UPDATED : ஜூலை 01, 2025 04:56 AM
ADDED : ஜூலை 01, 2025 04:49 AM

அஸ்தானா : நாட்டின் பாதுகாப்பைக் கருதி, முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் ஹிஜாப் போன்ற துணிகளைப் பயன்படுத்த தடை விதிக்கும் மசோதா கஜகஸ்தானில் நிறைவேறிஉள்ளது.
மத்திய ஆசிய நாடான கஜகஸ்தானில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினர் இல்லை. இருப்பினும் கடந்த சில ஆண்டுகளாக இங்கு, முஸ்லிம்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதையடுத்து, மதம் தொடர்பான கட்டுப்பாடுகள் அங்கு தீவிரமாக உள்ளன.
'பெண்கள் முகத்தை மூடும் வகையில், ஹிஜாப் உள்ளிட்டவை அணிவது, முஸ்லிம் மதத்தில் கட்டாயமில்லை.
'அது வேண்டுமென்றே திணிக்கப்பட்டுள்ளது' என, கஜகஸ்தான் அதிபர் காஸிம் ஜோமார்ட் தோகாயேவ் ஏற்கனவே கூறியிருந்தார்.
இங்கு, பள்ளிகளில் ஹிஜாப் அணிவதற்கு, 2017ல் ஏற்கனவே தடை விதிக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளிலும் ஆசிரியர்கள் மற்றும் மாணவியர் ஹிஜாப் அணிவதற்கு, 2023ல் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், இந்தத் தடைக்கு எதிராக முஸ்லிம்கள் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டின் பாதுகாப்பு கருதி, பொது இடங்களில் ஹிஜாப் அணிவதற்கு தடை விதிக்கும் வகையில், கஜகஸ்தான் பார்லிமென்டில் மசோதா நிறைவேறியுள்ளது. இது அதிபரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்த பிராந்தியத்தில் உள்ள உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகிய நாடுகளிலும், முகத்தை மூடும் வகையில் துணிகள் அணிவதற்கு ஏற்கனவே தடை உள்ளது.