வங்கதேசத்தில் ஹிந்துக்கள் வீடுகள் தொடர்ந்து எரிப்பு! தடுப்பார் யாருமில்லை
வங்கதேசத்தில் ஹிந்துக்கள் வீடுகள் தொடர்ந்து எரிப்பு! தடுப்பார் யாருமில்லை
UPDATED : டிச 30, 2025 12:54 AM
ADDED : டிச 29, 2025 11:57 PM

டாக்கா : வங்கதேசத்தில் ஹிந்துக்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில், ஹிந்து குடும்பத்தைச் சேர்ந்த வீடு உட்பட ஐந்து வீடுகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத வெறியர்களை தடுப்பதற்கு யாரும் இல்லாத நிலையில், அங்கு வன்முறை தலைவிரித்தாடுகிறது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில் கடந்தாண்டு வெடித்த மாணவர்கள் போராட்டங்களை தொடர்ந்து, அங்கு பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா பதவி விலகியதுடன், நம் நாட்டில் தஞ்சம் அடைந்தார்.
இடைக்கால அரசு
இதை தொடர்ந்து, ராணுவம் நிர்வாகத்தை கட்டுப்பாட்டில் எடுத்தது. மாணவர்கள் அமைப்பினருடன் பேச்சு நடத்திய பின், நோபல் பரிசு பெற்ற முகமது யூனஸ் தலைமையில் இடைக்கால அரசு பதவியேற்றது.
ஷேக் ஹசீனா பதவி விலகிய பின், வங்கதேசத்தில் அரசியல் குழப்பம் அதிகரித்து, மதவாதம் தலைவிரித் தாடுகிறது. குறிப்பாக, நம் நாட்டுக்கு எதிரான கருத்துகள் பரப்பப்படுவதுடன், சிறுபான்மையினரான ஹிந்துக்கள் மீதான தாக்குதல்களும் அதிகரித் து உள்ளன.
வரும் பிப்ரவரி மாதம் அங்கு பொதுத் தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், கடந்த 18ம் தேதி வங்கதேச மாணவர்கள் அமைப்பின் தலைவர் ஷெரீப் ஓஸ்மான் ஹாதி சுட்டுக் கொல்லப்பட்டார். இதற்கு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரே காரணம் என குற்றம் சாட்டப்பட்டது.
இதையடுத்து, வங்கதேசத்தின் பல நகரங்களில் வன்முறைகள் வெடித்தன. குறிப்பாக, ஹிந்துக்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்தன. இதன் ஒரு பகுதியாக, மைமென்சிங் பகுதியைச் சேர்ந்த திபு சந்திர தாஸ், 27, என்ற ஹிந்து இளைஞர் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டார். மேலும், அவருடைய உடலை மரத்தில் கட்டி வைத்து தீ வைத்தனர்.
5 பேர் கைது
இதேபோன்று பல இடங்களில் ஹிந்துக்கள் மற்றும் அவர்களது வீடுகள், கோவில்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. சாட்டோகிராம் மாவட்டத்தில் உள்ள ராவ்ஜனின் மூன்று இடங்களில், கடந்த ஐந்து நாட்களுக்குள் ஏழு ஹிந்து குடும்பங்களின் வீடுகளுக்கு தீ வைக்கப்பட்டன.
இந்நிலையில், முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் பிரோஜ்பூர் மாவட்டம் தும்ரிடோலா கிராமத்தில், சஹா என்ற ஹிந்துவின் வீட்டுக்கு நேற்று தீ வைக்கப்பட்டது. அருகே இருந்த மேலும் நான்கு வீடுகளிலும் தீப்பற்றியது. தீ கொழுந்துவிட்டு எரிந்த நிலையில், வீடுகளில் துாங்கிக் கொண்டு இருந்தவர்கள் கண் விழித்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
வெளியில் தப்பிக்க கதவை திறக்க முயன்றபோது, கதவு வெளிப்புறமாக பூட்டப்பட்டிருந்தது. இதையடுத்து, தகர மேற்கூரைகளையும், மூங்கில் வேலிகளையும் வெட்டி உயிர் தப்பியதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதில், வீட்டில் இருந்த பொருட்கள் முற்றிலும் எரிந்து சாம்பலாயின. இச்சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின்படி ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இடைக்கால அரசு, ராணுவம் உட்பட எந்த தரப்பும் பெரிய அளவில் நடவடிக்கைகள் எடுக்காத நிலையில், தட்டிக் கேட்க யாரும் இல்லாததால், சில கும்பல்கள், வன்முறைகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றன.

