ஹிந்து துறவிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல்! வங்கதேச வக்கீல்கள் ஆஜராக அச்சம்
ஹிந்து துறவிக்கு ஜாமின் கிடைப்பதில் சிக்கல்! வங்கதேச வக்கீல்கள் ஆஜராக அச்சம்
UPDATED : டிச 04, 2024 02:49 PM
ADDED : டிச 04, 2024 01:51 AM

டாக்கா: வங்கதேசத்தில், தேச துரோக வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஹிந்து துறவி சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரிக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகாததால், அவரது ஜாமின் மனு அடுத்த மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நம் அண்டை நாடான வங்கதேசத்தில், 'இஸ்கான்' எனப்படும் கிருஷ்ண பக்தி அமைப்பின் முன்னாள் தலைவர் சின்மோய் கிருஷ்ண தாஸ் பிரம்மச்சாரி, 'சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே' என்ற அமைப்பின் செய்தித் தொடர்பாளராக உள்ளார்.
வங்கதேசத்தில் சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிசெய்ய வலியுறுத்தி, ரங்புர் என்ற இடத்தில் கடந்த மாதம் போராட்டத்தில் ஈடுபட்டார். அப்போது வங்கதேச தேசிய கொடியை அவர் அவமதித்ததாக தேச துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அச்சுறுத்தல்
இந்த விவகாரத்தில் சின்மோய் தாஸ் சமீபத்தில் கைது செய்யப்பட்டார். இவரது ஜாமின் மனு, கடந்த மாதம் 26ல் நிராகரிக்கப்பட்டது. இதை தொடர்ந்து நீதிமன்ற வாயிலில் போலீசாருக்கும், ஹிந்து அமைப்பினருக்கும் இடையே மோதல் வெடித்தது. இதில், சைபுல் இஸ்லாம் அலிப் என்ற வழக்கறிஞர் உயிரிழந்தார்.
இதை தொடர்ந்து சின்மோய் தாஸ் ஜாமின் மனு, சாட்டோகிராம் நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சின்மோய் தாசுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராகாததை அடுத்து, விசாரணை அடுத்த மாதம் 2ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சின்மோய் தாசுக்கு ஆதரவாக வழக்கறிஞர்கள் ஆஜராக கூடாது என்பதற்காக, 70க்கும் மேற்பட்ட ஹிந்து வழக்கறிஞர்கள் மீது போலி வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், வழக்கறிஞர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் சம்மிலிதா சனாதனி ஜக்ரன் ஜோதே குற்றஞ்சாட்டி உள்ளது.
பாதுகாப்பு இல்லை
இதற்கிடையே, மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவில் உள்ள இஸ்கான் அமைப்பின் துணை தலைவர் ராதாராமன் தாஸ் கூறியதாவது:
சின்மோய் தாசுக்காக ஆஜராக இருந்த வழக்கறிஞர் ராமன் ராய், முஸ்லிம்களால் கொடூரமாக தாக்கப்பட்டுள்ளார். அவரது வீடு சூறையாடப்பட்டுள்ளது. தீவிர சிகிச்சை பிரிவில் அவர் உயிருக்காக போராடி வருகிறார்.
வங்கதேசத்தில் உள்ள இஸ்கான் துறவிகள் காவி உடை அணிவதையும், நெற்றியில் சந்தனப் பொட்டு வைப்பதையும் தவிர்க்கவும். உங்கள் பக்தி உணர்வை ரகசியமாக வைத்துக் கொள்வதே இப்போதைக்கு உயிருக்கு பாதுகாப்பானது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
வங்கதேசத்தில், சிறுபான்மையினரான ஹிந்துக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி இருப்பதை, வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் உள்ள ஹோட்டல்கள் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் வன்மையாக கண்டித்துள்ளது.
வங்கதேசத்தில் இந்திய தேசிய கொடி அவமதிக்கப்பட்டதால், அந்நாட்டில் இருந்து வரும் விருந்தினர்களுக்கு திரிபுரா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் சேவை அளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக, சங்கத்தின் பொது செயலர் சாய்கத் பந்தோபாத்யாய் நேற்று முன்தினம் அறிவித்தார்.