பாக்.,கில் மீண்டும் கட்டப்படும் ஹிந்து கோயில்: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
பாக்.,கில் மீண்டும் கட்டப்படும் ஹிந்து கோயில்: பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு
ADDED : அக் 21, 2024 05:12 PM

லாகூர்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில், 64 ஆண்டுக்கு பிறகு மீண்டும் ஹிந்து கோயில் கட்டப்பட உள்ளது.
பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் வழிபாட்டுத் தலங்களை மேற்பார்வையிடும் அமைப்பு சார்பில் ராவி நதியின் மேற்குக் கரை நரோவல் நகரத்தில் 1960ல்
பாவோலி சாஹிப் கோவில் கட்ட தொடங்கியது. ஆனால் பணிகள் முடிக்கவில்லை. அந்த கோவில் முற்றிலும் அழிந்து போனது.
தற்போது, நரோவல் மாவட்டத்தில் ஹிந்துக் கோவில் எதுவும் இல்லை, இதனால் ஹிந்து சமூகம் தங்கள் மதச் சடங்குகளை செய்வதற்கு
சியால்கோட் மற்றும் லாகூரில் உள்ள கோவில்களுக்குச் செல்லும்படி அரசு நிர்வாகம் கட்டாயப்படுத்துகிறது.
இதுகுறித்து பாக்., தரம்ஸ்தான் கமிட்டியின் முன்னாள் தலைவர் ரத்தன் லால் ஆர்யா கூறுகையில்,
பாவோலி சாஹிப் கோவிலின் மீதான அரசு கட்டுப்பாட்டினால் அது செயல்படாமல் போய்விட்டது. அதன் பிறகு 45 ஹிந்து கோயில்கள் கட்டப்பட்டன. அவை அனைத்தும் பின்னாளில் அழிந்துபோனது.
நரோவலில் 1,453 பேர் ஹிந்து சமூகத்தினர் வசிக்கின்றனர். அவர்களின் வழிபாட்டிற்கு பிரத்யேக இடம் இல்லாதது, அவர்களுக்கு மிகுந்த வேதனையை தந்தது.
பாகிஸ்தான் அரசு புள்ளிவிபரப்படி, 75 லட்சம் ஹிந்து மக்கள் வசிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கோவில் கட்டப்பட வேண்டும் என்று 20 ஆண்டாக, அரசுக்கு கோரிக்கை வைத்து கொண்டே இருந்தோம். அதன் பயனாக தற்போது 64 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் கோவில் கட்டுவதற்கு பட்ஜெட்டில் நிதி 30 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது ஹிந்து சமூகத்திற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு ரத்தன் லால் ஆர்யா கூறினார்.

