வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பில்லை; இடைக்கால அரசின் 100 நாட்களில் நடந்த அராஜகம்
வங்கதேசத்தில் ஹிந்துக்களுக்கு பாதுகாப்பில்லை; இடைக்கால அரசின் 100 நாட்களில் நடந்த அராஜகம்
UPDATED : நவ 21, 2024 03:33 PM
ADDED : நவ 21, 2024 01:36 PM

டாக்கா: வங்கதேசத்தில் இடைக்கால அரசு அமைந்த 100 நாட்களில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக குற்ற நிகழ்வுகள் அதிகரித்திருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது.
வங்கதேசத்தின் பிரதமராக இருந்த அவாமி லீக் தலைவர் ஷேக் ஹசீனாவுக்கு எதிராக கிளர்ச்சி வெடித்தது. அவர் ராஜினாமா செய்து விட்டு வங்கதேசத்தை விட்டு அவர் வெளியேறினார். அதன் பிறகு, முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அங்கு அமைந்துள்ளது.
அப்படி இருந்தும் சட்டம் ஒழுங்கு நிலை சீரடையவில்லை. குறிப்பாக, சிறுபான்மையினர் மீது தாக்குதல் அதிகரித்து வருகிறது. ஹிந்துக்களின் சொத்துக்கள் மற்றும் மத வழிபாட்டு தலங்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த சம்பவத்திற்கு இந்தியா. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இந்த நிலையில், முகமது யூனுஸின் அரசு பொறுப்பேற்று 100 நாட்களுக்கும் மேலான நிலையில், வங்கதேசத்தில் ஹிந்துக்கள், பவுத்தம், கிறிஸ்துவம் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதாக பெர்லினை தலைமையிடமாகக் கொண்ட டி.ஐ.பி., (Transparency International Bangladesh) என்ற அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.
கடந்த ஆக., 5ம் தேதி முதல் 20ம் தேதி வரையில் மட்டும் 2,010 மத மோதல்கள் நடந்துள்ளதாகவும், அதில், 9 சிறுபான்மையின மக்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வங்கதேசத்தில் மதத்தை அடிப்படையாக கொண்டு அரசியல் செய்வது அதிகரித்துள்ளதாகவும், கடந்த அக்டோபரில் ஹிந்துக்களின் பண்டிகையான துர்கா பூஜையின் போது பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் நிகழ்ந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.
ஹசினா ஆட்சிக்குப் பிறகு, ஹிந்துக்களை இலக்காக வைத்து முஸ்லீம் அமைப்புகள் தாக்குதல் நடத்தியதாகவும் அந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.