சீனாவில் பரவுகிறது எச்.எம்.பி.வி., புதிய தொற்று! மருத்துவமனைகளில் திரளும் கூட்டம்
சீனாவில் பரவுகிறது எச்.எம்.பி.வி., புதிய தொற்று! மருத்துவமனைகளில் திரளும் கூட்டம்
UPDATED : ஜன 04, 2025 03:57 PM
ADDED : ஜன 04, 2025 12:03 AM

பீஜிங்: சீனாவில், எச்.எம்.பி.வி., என்ற புதுவகையான நுரையீரல் தொற்று பரவ துவங்கி இருப்பதால், மருத்துவமனைகளில் கூட்டம் நிரம்பி வழிகிறது; இது பிற நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், ஆசியா முழுதும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
'கோவிட் - 19' எனப்படும் கொரோனா தொற்று பரவல், 2019 இறுதியில் சீனாவில் துவங்கி, அடுத்த 2 - 3 ஆண்டுகளுக்கு உலகையே ஸ்தம்பிக்க செய்தது. அந்த பாதிப்பினால் வீழ்ந்த சர்வதேச பொருளாதாரம், இப்போது தான் மெல்ல சுதாரித்து எழத் துவங்கி உள்ள நிலையில், சீனா, அடுத்த வெடிகுண்டை வீசியுள்ளது.
சீனாவின் பல்வேறு மாகாணங்களில், எச்.எம்.பி.வி., எனப்படும், 'ஹியூமன் மெட்டா நியுமோ வைரஸ்' என்ற தொற்று வேகமாக பரவ துவங்கியுள்ளது. இந்த தகவலை, சீன நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் உறுதி செய்துள்ளது. இதில் பாதிக்கப்பட்டவர்களால், மருத்துவமனைகளில் கூட்டம் அலைமோதுகிறது. குறிப்பாக, சீனாவின் வடக்கு பகுதியில் இந்த தொற்று பரவல் மிக தீவிரமாக உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
எச்.எம்.பி.வி., தொற்று, நுரையீரலை தாக்கி கடுமையான சுவாசக் கோளாறுகளை ஏற்படுத்தும். அனைத்து வயதினரையும் இது தாக்கக்கூடும் என்றாலும், குழந்தைகள் எளிதில் பாதிக்கப்படுவதாக டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இந்த தொற்று பரவல் குறித்து சீன அரசோ, உலக சுகாதார நிறுவனமோ இதுவரை அவசர நிலையை அறிவிக்கவில்லை. இந்த புதிய தொற்றுப் பரவலை பல்வேறு ஆசிய நாடுகளும் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. குறிப்பாக, சீனாவுக்கு அருகில் உள்ள நாடுகள் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன.
ஜப்பானில், கடந்த சில வாரங்களில், 'இன்ப்ளூயன்ஸா' தொற்று பாதிப்பு தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், ஜப்பான் முழுதும் உள்ள 5,000 மருத்துவமனைகளில் 94,259 பேர் ப்ளூ தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்றுள்ளனர். இது வழக்கத்துக்கு மாறானது என, அந்நாட்டு சுகாதாரத்துறை கவலை தெரிவித்துள்ளது.