UPDATED : ஜூலை 10, 2025 10:59 AM
ADDED : ஜூலை 10, 2025 10:11 AM

வாஷிங்டன்: அமெரிக்க அரசு விசா நிபந்தனைகள், கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ள நிலையில், விசா கட்டணத்தையும் இரண்டரை மடங்கு அளவுக்கு உயர்த்தியுள்ளது.
அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப் இந்தாண்டு ஜனவரியில் பதவியேற்றதில் இருந்து விசா வழங்குவதில் பல நிபந்தனைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டு வந்துள்ளார்.
இந்நிலையில், 'பிக் பியூட்டிபுல் பில்' எனப்படும் அரசு செலவீனம் தொடர்பான மசோதா சமீபத்தில் நிறைவேறியது. இதற்கு அதிபர் டிரம்பும் ஒப்புதல் அளித்துஉள்ளார்.
இந்த சட்டத்தின்படி, விசா கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.
இதன்படி, குடியேற்றம் அல்லாத, மாணவர், தொழில், சுற்றுலா போன்ற விசாக்களுக்கான கட்டணங்களுடன், 'இன்டகிரிட்டி' எனப்படும் நேர்மை கட்டணமாக, 250 டாலர், அதாவது, 22,000 ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படும். மேலும் சில கூடுதல் கட்டணங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
இவை, 2026ல் இருந்து நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. இது அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும். இந்த கூடுதல் கட்டணம், நிபந்தனைகளின் அடிப்படையில் நாடு திரும்பும்போது திருப்பி தரப்படும்.
இந்த கட்டணங்கள், விலைவாசியுடன் தொடர்புடையவை என்று கூறப்பட்டுள்ளது. அதனால், ஆண்டுக்கு ஆண்டு மாறும்.
இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு சுற்றுலா அல்லது வர்த்தக விசா கேட்டு விண்ணப்பிக்கும் போது, தற்போது, 15,855 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. புதிய நேர்மை கட்டணம் மற்றும் பிற கட்டணங்களையும் சேர்த்தால், இனி, 40,456 ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும். கிட்டத்தட்ட, இரண்டரை மடங்கு அதிகரித்துள்ளது.