ADDED : செப் 08, 2025 06:01 AM

சனா: மேற்கு ஆசிய நாடான ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிக்கு, அல் ரஹாவி பிரதமராக 2024 ஆகஸ்ட் முதல் பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், ரஹாவி கொல்லப்பட்டார். இதற்கு பதிலடியாக, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இஸ்ரேல் மீது ட்ரோன் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்.
இது குறித்து இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளதாவது:
ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவிய மூன்று ட்ரோன்கள் இடைமறித்து தாக்கி அழிக்கப்பட்டன. இவற்றில் இரண்டு, இஸ்ரேலிய எல்லையை கடப்பதற்கு முன்பாகவே இஸ்ரேல் விமானப்படை சுட்டு வீழ்த்தியது. மேலும், ஒரு ட்ரோன் எகிப்தின் வழியாக நுழைந்த பின் சுட்டு வீழ்த்தப்பட்டது.
தெற்கு இஸ்ரேல் பகுதியில் வசிக்கும் மக்களை எச்சரிக்கும் வகையில் சைரன்கள் ஒலிக்க விடப்பட்டன.
ராமோன் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ள எய்லாட் நகருக்கு அருகில் ஒரு ட்ரோன், பாதுகாப்பு அரணை மீறி உள்ளே நுழைந்து தாக்கியதில் ஒருவர் காயமடைந்தார். மேலும், விமான நிலையத்தின் ஒரு பகுதியும் சேதமடைந்தது.
இவ்வாறு தெரிவித்து உள்ளது.