உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கா, இந்தியா குறுகியது எப்படி: 450 ஆண்டுகளாக தொடரும் குளறுபடி
உலக வரைபடத்தில் ஆப்பிரிக்கா, இந்தியா குறுகியது எப்படி: 450 ஆண்டுகளாக தொடரும் குளறுபடி
ADDED : ஆக 26, 2025 07:41 PM

லண்டன்: இந்தியாவும், ஆப்பிரிக்க கண்டமும், உண்மையில் கொண்டிருக்கும் நிலப்பரப்பை காட்டிலும் குறுகியதாக உலக வரைபடத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளன. 450 ஆண்டுக்கும் மேலாக தொடரும் இந்த குளறுபடிக்கு முடிவு கட்ட வேண்டும் என்ற கோரிக்கை, உலகம் முழுவதும் வலுத்து வருகிறது.
தற்போது நாம் பயன்படுத்தி வரும் உலக வரைபடங்கள், 16ம் நுாற்றாண்டில் தயார் செய்யப்பட்டவை. கப்பல் போக்குவரத்துக்காக பெல்ஜியம் நாட்டை சேர்ந்த மெர்கேட்டர் என்பவர், 1569ம் ஆண்டு வெளியிட்ட உலக வரைபடங்களே தற்போதும் புழக்கத்தில் இருக்கின்றன.
அவை, எளிதான கடல் பயணத்துக்கு தகுந்தபடி தயார் செய்யப்பட்டவை. துருவப்பகுதியை ஒட்டியுள்ள நாடுகளும், கண்டங்களும், இருப்பதை காட்டிலும் பெரியதாக இந்த வரைபடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.
அதே வேளையில், பூமத்திய ரேகையை ஒட்டியிருக்கும் நாடுகள், கண்டங்கள், உண்மையில் இருப்பதை காட்டிலும் குறுகலாக, சிறியதாக காண்பிக்கப்பட்டுள்ளன.ஆப்பிரிக்காவில் 14ல் ஒரு பங்கு மட்டுமே நிலப்பரப்பை கொண்ட கிரீன்லாந்து, ஆப்பிரிக்காவுக்கு இணையான நிலப்பரப்பை கொண்டது போல, வரைபடம் தோற்றத்தை ஏற்படுத்துகிறது.
கிரீன்லாந்து மட்டுமின்றி, வட அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களும், உண்மையான நிலப்பரப்பை காட்டிலும், அளவில் பெரியதாக வரைபடத்தில் காண்பிக்கப்படுகின்றன.அதேபோல, கிரீன்லாந்து இந்தியாவை விட அதிக நிலபரப்பை கொண்டது போலவும் வரைபடத்தில் இருக்கிறது. உண்மையில், கிரீன்லாந்தை காட்டிலும் இந்தியா ஒன்றரை மடங்கு அதிக நிலப்பரப்பு கொண்ட நாடாகும்.
ஆப்பிரிக்கா கண்டத்தில் பாதி அளவு பரப்பை மட்டுமே கொண்டுள்ள வட அமெரிக்கா, அதற்கு இணையான பரப்பு கொண்டது போல வரைபடத்தின் தோற்றம் இருக்கிறது. ஐரோப்பா கண்டம், அதன் உண்மையான பரப்பை காட்டிலும் பெரியதாக வரைபடங்களில் காண்பிக்கப்படுகிறது.உலக நாடுகளை ஐரோப்பிய நாடுகள் அடிமைப்படுத்தி ஆட்சி நடத்தியதன் விளைவாக, இந்த தவறு நீண்ட காலமாக உலகம் முழுவதும் தொடர்ந்து வருகிறது. தங்கள் மேலாதிக்கத்தை காட்டவும், தங்கள் நாடுகள் பெரிய நாடுகள் என்று உலகம் முழுவதும் நம்ப வைக்கவும், ஐரோப்பிய காலனி ஆட்சியாளர்கள் இந்த வரைபடங்களை பயன்படுத்திக் கொண்டனர்.
ஆனால், அந்த வரைபடங்கள் உண்மையில் தவறானவை என்பது நவீன தொழில்நுட்பங்கள் மூலம் அம்பலமான பிறகும், அவற்றை பயன்படுத்துவது உலகம் முழுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தை இப்போது ஆப்பிரிக்க நாடுகள் கையில் எடுத்துள்ளன. வரைபடத்தை மாற்றி அமைக்க வேண்டும் என்ற பிரசாரத்தை, ஆப்பிரிக்க யூனியன் கூட்டமைப்பு முன்னெடுத்துள்ளது.
தவறுகளுடன் கூடிய மெர்கேட்டர் வரைபடங்களுக்கு பதிலாக, துல்லியமான வரைபடங்கள் உலகம் முழுவதும் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்று இணையத்தில் நடக்கும் பிரசாரத்தை ஆப்பிரிக்க யூனியன் ஆதரிக்கிறது.
ஆப்பிரிக்க யூனியன் துணைத்தலைவர் செல்மா மலிகா ஹதாதி கூறுகையில், ''இது வெறும் வரைபடம் தொடர்பான பிரச்னை மட்டுமல்ல. ஆப்பிரிக்காவின் உண்மையான வரைபடத்தை மாற்றிக்காட்டுவது என்பது, பல்வேறு சர்வதேச விஷயங்களிலும் ஆப்பிரிக்க நாடுகள் மீதான பார்வையை மாற்றி விடுகிறது,''' என்றார்.
சமீபத்தில் விண்வெளிக்கு சென்ற இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா, ''இந்தியா உண்மையில் வரைபடத்தில் இருப்பதைக் காட்டிலும் பெரியதாக இருக்கிறது,'' என்று கூறியிருந்தார். அதுவும் உண்மை தான் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.இதனால், ஆப்பிரிக்க யூனியன் நாடுகளுடன் இந்தியாவும் இணைந்து வரைபடத்தை மாற்றி அமைக்க குரல் கொடுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் எழுந்துள்ளன.