ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் கொன்றது எப்படி?
ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை இஸ்ரேல் ராணுவம் கொன்றது எப்படி?
UPDATED : அக் 19, 2024 02:51 PM
ADDED : அக் 19, 2024 12:58 AM

ஜெருசலேம்: ஹமாஸ் பயங்கரவாத தலைவர் யாஹ்யா சின்வாரை, இஸ்ரேல் ராணுவம் எப்படி கொன்றது என்பது குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேலுக்குள் நுழைந்து, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகள், 2023 அக்., 7ல் தாக்குதல் நடத்தினர். இதில், 1,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில், காசாவில், 40,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
மகிழ்ச்சி
கடந்த 16ம் தேதி, காசாவின் தெற்கு பகுதியில் உள்ள ரபா மாவட்டத்தில், இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதில், ஹமாஸ் பயங்கரவாத தலைவர் யாஹ்யா சின்வார், 61, சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த தகவலை இஸ்ரேல் வெளியிட்ட நிலையில், ஹமாஸ் பயங்கரவாத அமைப்பும் உறுதிப்படுத்தி உள்ளது.
கடந்த ஆண்டு இஸ்ரேல் மீது நடந்த தாக்குதலுக்கு, ஹமாஸ் ராணுவ தலைவர் முகமது டெய்ப் உடன் இணைந்து மூளையாகச் செயல்பட்டவர், யாஹ்யா சின்வார்.தற்போது அவரை தீர்த்துக் கட்டி விட்டதால், இஸ்ரேல் ராணுவத்தினர் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இந்நிலையில், ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வாரை சுட்டுக் கொன்றது குறித்து, இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் டேனியல் ஹகாரி கூறியதாவது:
ரபா மாவட்டத்தில், கடந்த சில வாரங்களாக, ராணுவத்தினர் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினர். அப்பகுதியில் செயல்படும், 828வது படைப்பிரிவின் வீரர்கள், மூன்று பயங்கரவாதிகளை அடையாளம் கண்டனர்.
உறுதி
ராணுவ வீரர்களை கண்டதும் பயங்கரவாதிகள் ஒவ்வொரு வீடாக மாறி மாறி தப்பி ஓடினர். இதில் இரு பயங்கவராதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதும், ஒரு பயங்கரவாதி மட்டும் சேதமடைந்த வீட்டுக்குள் தப்பி ஓடி விட்டார்.
அந்த வீட்டை, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானம் வாயிலாக முழுமையாக சோதனை செய்தோம். அப்போது, கையில் பலத்த காயத்துடன், முகத்தை மூடியபடி யாஹ்யா சின்வார் உட்கார்ந்திருந்தார்.
ட்ரோன் கண்காணிப்பதை அறிந்த அவர், அதன் மீது ஏதோவொரு பொருளை துாக்கியெறிந்தார். அங்கிருப்பது யாஹ்யா சின்வார் தான் என உறுதிப்படுத்தப்பட்ட பின் சுட்டுக் கொன்றோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, ஹமாஸ் பயங்கரவாத தலைவர் யாஹ்யா சின்வார் சுட்டுக் கொல்லப்பட்டது தொடர்பான கண்காணிப்பு கேமரா காட்சிகளை, இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது.
அதில் சேதமடைந்த வீட்டில் யாஹ்யா சின்வார் அமர்ந்திருப்பதும், ட்ரோன் மீது ஒரு பொருளை துாக்கி வீசுவதும் பதிவாகி உள்ளது.
இந்நிலையில், லெபனானில் செயல்படும் ெஹஸ்பொல்லா அமைப்பு, 'போர் புதிய கட்டத்தை எட்டியுள்ளது' என, தெரிவித்துள்ளது.
போர் இன்னும் முடிவுக்கு வரவில்லை. எங்களின் தாக்குதல் இன்னும் தீவிரமாக இருக்கும். பயங்கரவாதிகள் வசம் உள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் தாக்குதல் தொடரும்.
பெஞ்சமின் நெதன்யாகு
பிரதமர், இஸ்ரேல்
ஹமாஸ் தலைவர் கொல்லப்பட்ட நாள், இஸ்ரேலுக்கும், இந்த உலகத்துக்கும் நல்ல நாள். பயங்கரவாதிகள் வசம் உள்ள பிணைக்கைதிகள் அனைவரையும் விடுவிப்பதற்கான சூழல் உருவாகி உள்ளது.
ஜோ பைடன்
அதிபர், அமெரிக்கா