ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு உதவியவன் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை; அதிர்ச்சி பின்னணி
ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு உதவியவன் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை; அதிர்ச்சி பின்னணி
ADDED : மார் 09, 2025 09:29 AM

இஸ்லாமாபாத்: முன்னாள் இந்திய கடற்படை அதிகாரியும், தொழிலதிபருமான குல்பூஷன் ஜாதவை கடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு உதவிய முப்தி ஷா மிர் அடையாளம் தெரியாத நபரால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
ஈரானில் இருந்து முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவை கடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ.,க்கு உதவியவன் முப்தி ஷா மிர். இவன் துர்பத்தில் உள்ள மசூதியில் இருந்து வெளியே வந்துள்ளான்.
அப்போது ஆயுதம் ஏந்திய அடையாளம் தெரியாத நபர்கள் துப்பாக்கியால் சுட்டனர். பலத்த காயம் அடைந்த அவன் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கு அவன் சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தான்.
முப்தி ஷா மிர் யார்?
* பயங்கரவாதியுமான முப்தி ஷா மிர் பாகிஸ்தானின் இஸ்லாமிய கட்சிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தான்.
* இவன் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தான்.
* பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்பின் நெருங்கிய உதவியாளராக இருந்த முப்தி ஷா மிர், போதைப்பொருள் மற்றும் ஆயுதக் கடத்தலில் தீவிரமாக ஈடுபட்டிருந்தான்.
* பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களுக்கு அடிக்கடி சென்று வருபவன்; பயங்கரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவ காரணமாக இருந்தான்.
* ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கும் அவனுக்கும் மோதல் காரணமாக கொல்லப்பட்டதாவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்திய கடற்படையின் முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மார்ச் 3, 2016 அன்று பலுசிஸ்தானில் கைது செய்யப்பட்டார்.
நாட்டிற்கு எதிரான உளவு பார்த்தல் மற்றும் நாசவேலை நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டார் என பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், கடற்படையில் இருந்து முன்கூட்டியே ஓய்வு பெற்று, துறைமுக நகரமான சபாஹரில் ஒரு தொழிலை நடத்தி வந்த ஜாதவ் ஈரானில் இருந்து கடத்தப்பட்டதாக இந்தியா கூறுகிறது.
நாட்டிற்கு எதிரான உளவு பார்த்தல் உள்ளிட்ட நாச வேலையில் ஈடுபட்டதாக கூறும் குற்றம் சாட்டிற்கும், தனக்கு எந்தத் தொடர்பும் இல்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது. இந்தியரான குல்பூஷண் ஜாதவுக்கு தற்போது பாகிஸ்தானில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இவரை நாடு கடத்த பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ., அமைப்புக்கு முப்தி ஷா மிர் வலது கையாக செயல்பட்டுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.