போரினால் குழந்தைகளுக்கு பேரழிவு: பிரதமர் மோடி கவலை
போரினால் குழந்தைகளுக்கு பேரழிவு: பிரதமர் மோடி கவலை
UPDATED : ஆக 23, 2024 05:15 PM
ADDED : ஆக 23, 2024 03:06 PM

கீவ்: உக்ரைன் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் ஜெலன்ஸ்கியை கட்டியணைத்தும், கைகுலுக்கியும் வரவேற்றார். பிறகு போர் வீரர்கள் நினைவிடத்தில் உள்ள போரில் உயிரிழந்த குழந்தைகள் நினைவிடத்தில் பிரதமர் மோடி, ஜெலன்ஸ்கி அஞ்சலி செலுத்தினர்.
வரவேற்பு
போலந்து பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி ரயில் மூலம் உக்ரைன் சென்றடைந்தார். அங்கு, அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய வம்சாவளியினர், அங்கு தங்கி உள்ள இந்தியர்கள் மோடியை உற்சாகமாக வரவேற்றனர்.
மரியாதை
பிறகு கீவ் நகரில் உள்ள மஹாத்மா காந்தியின் சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இது குறித்து அவர் 'எக்ஸ் ' சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: கீவ் நகரில் மஹாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்தினேன். அவரின் லட்சியங்கள் உலகளாவியவை மற்றும் லட்சக்கணக்கானவர்களுக்கு நம்பிக்கை அளிப்பவை. மனித குலத்துக்கு அவர் காட்டிய வழியை நாம் அனைவரும் பின்பற்றுவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அஞ்சலி
ஜெலன்ஸ்கி வெளியிட்ட பதிவில் கூறியுள்ளதாவது: அனைத்து நாட்டிலும், பாதுகாப்பாக வாழ குழந்தைகளுக்கு உரிமை உள்ளது. இதனை நாம் சாத்தியமாக்க வேண்டும். எனக்கூறியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மோடியும், ஜெலன்ஸ்கியும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். அப்போது, ரஷ்ய தாக்குதல் குறித்தும், போரை முடிவுக்கு கொண்டு வருவது குறித்தும் இருவரும் ஆலோசிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.