மனித உரிமை மீறல்: இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகளுக்கு பிரிட்டன் அரசு பொருளாதார தடை
மனித உரிமை மீறல்: இலங்கை முன்னாள் ராணுவ தளபதிகளுக்கு பிரிட்டன் அரசு பொருளாதார தடை
ADDED : மார் 26, 2025 04:55 AM

கொழும்பு : இலங்கையில், 2009ல் நடந்த உள்நாட்டுப் போரில், மனித உரிமை மீறல்கள் நடந்ததாகக் கூறி, அந்நாட்டின் முன்னாள் ராணுவ தளபதிகள் உட்பட நான்கு பேர் மீது, பிரிட்டன் பொருளாதார தடை விதித்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கையில், 2009ல், விடுதலை புலிகள் அமைப்புக்கும், அந்நாட்டு ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் வெடித்தது. இதில், லட்சக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இந்த போரில், ராணுவம் வென்றது.
இந்நிலையில், புலிகள் அமைப்புக்கு எதிரான போரை முன்னின்று நடத்திய, இலங்கை ஆயுதப்படை முன்னாள் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரண்ணகோடா, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஜகத் ஜெயசூர்யா, புலிகள் அமைப்பின் துணைதலைவராக இருந்து, பின், அதற்கு எதிராக செயல்பட்டு, துணை அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக, ஐரோப்பிய நாடான பிரிட்டன் பொருளாதார தடை விதித்துள்ளது.
இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவு அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், 'இலங்கை உள்நாட்டு போரில், அளவுக்கு அதிகமாக மனித உரிமை மீறல்கள் நடந்தன. நீதிக்கு புறம்பான கொலைகள், சித்ரவதை, பாலியல் வன்முறைகள் இதில் அடங்கும்.
'இதற்கு பொறுப்புகூறும் வகையில், ஷவேந்திர சில்வா, வசந்த கரண்ணகோடா, ஜகத் ஜெயசூர்யா, விநாயக மூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு எதிராக பொருளாதார தடை விதிக்கப்படுகிறது' என, குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, இந்த நான்கு பேரும் பிரிட்டனுக்கு பயணம் செய்ய முடியாது. மேலும், அந்நாட்டில் அவர்களின் சொத்துகள் முடக்கப்படும்.