ADDED : ஜூலை 19, 2024 09:26 AM

வாஷிங்டன்: கடவுள் அருளால் தான் உயிர் பிழைத்தேன் என்றும் தொடர்ந்து அமெரிக்காவுக்காக போராடுவேன் என்றும் அமெரிக்க அதிபர் தேர்தல் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் இன்று (ஜூலை 19) கட்சி கூட்டத்தில் பேசுகையில் அவர் குறிப்பிட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் மர்ம நபர் துப்பாக்கியால் சுட்டதில் காதில் லேசான காயத்துடன் டிரம்ப் உயிர் தப்பினார். இதன் பின்னர் அவர் பங்கேற்ற முதல் கூட்டத்தில் பேசியதாவது:
அந்த துப்பாக்கிச்சூடு நடந்ததை நான் எண்ணி பார்க்கிறேன். என் தலையை நோக்கி குண்டு பாய்ந்து வந்தது. என் மீது துப்பாக்கி குண்டு பட்டதும் எனது காது, கைகளில் ரத்தமாக இருந்தது. நான் இறந்து விட்டேன் என நினைத்தேன், கூடியிருந்த மக்கள் எல்லாம் நான் இறந்து விட்டதாக நினைத்து பதறினர். இறந்திருந்தால் நான் இப்போது உங்கள் முன்பு நிற்க முடியாது. கடவுள் என்னோடு இருக்கிறார் . கடவுள் அருளால் உயிர் பிழைத்தேன். தலையை சாய்த்து கொண்டதில் பெரும் ஆபத்தில் இருந்து தப்பினேன். நடந்த தாக்குதலை நினைக்கும் போது மிக வருத்தமாக உள்ளது. இருப்பினும் நான் இப்போது மிக உற்சாகமாக இருக்கிறேன்.
தற்போது நடப்பது அமெரிக்க மக்களின் தேர்தல். இந்த அமெரிக்க நாட்டிற்காக தொடர்ந்து பாடுபடுவேன். எனது வாழ்க்கையில் போராட்டம் போராட்டம் தொடர்ந்து போராடுவேன் . உலகில் அமைதியை நிலைநாட்டுவோம். ஜனநாயகத்தை காத்திட பாடுபடுகிறேன்.
தற்போது அமெரிக்காவில் அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு சரிவை சந்தித்துள்ளது. பணவீக்கம் அதிகரித்துள்ளது. எல்லை பாதுகாப்பு பலப்படுத்த வேண்டியுள்ளது. ஒரே நாடு என்ற அமெரிக்காவை காத்திட பாடுபடுவோம். மீண்டும் சிறந்த அமெரிக்காவை உருவாக்குவோம் இவ்வாறு டிரம்ப் பேசினார்.
பாதுகாப்பு படையினருக்கு பாராட்டு
டிரம்ப் உரையாற்றும் போது துப்பாக்கிச்சூட்டில் துரிதமாக செயல்பட்டதை நான் பாராட்டுகிறேன். அவர்களுக்கு நான் நன்றி கடமைப்பட்டிருக்கிறேன். மேடையில் பாதுகாப்பு படை வீரர்கள் போன்ற வடிவமைக்கப்பட்ட சிலைக்கு முத்தமிட்டு நன்றியை வெளிப்படுத்தினார்.