பும்ராவுக்கு சறுக்கல்... தரவரிசையில் கோலி, ரோஹித் சர்மாவுக்கும் பின்னடைவு
பும்ராவுக்கு சறுக்கல்... தரவரிசையில் கோலி, ரோஹித் சர்மாவுக்கும் பின்னடைவு
UPDATED : அக் 30, 2024 05:21 PM
ADDED : அக் 30, 2024 05:17 PM

மும்பை: ஐ.சி.சி., டெஸ்ட் போட்டிக்கான பவுலர்கள் தரவரிசைப்பட்டியலில் உலகின் நம்பர் ஒன் வீரராக திகழும் இந்தியாவின் பும்ரா முதலிடத்தை இழந்தார்.
இந்திய கிரிக்கெட் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. 3 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் 2போட்டிகளில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணி தொடரை வென்றது. 12 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை இழந்தது இந்திய அணி.
இந்தத் தொடரில் வேகப்பந்து வீச்சாளர்களை விட ஸ்பின் பவுலர்களே ஆதிக்கம் செலுத்தினர். இதனால் பும்ரா உள்ளிட்ட வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பெரிய அளவில் பவுலிங் வாய்ப்பு கிடைக்கவில்லை.
அதேபோல, வங்கதேசத்திற்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வரும் தென்னாப்ரிக்கா அணி முதல் டெஸ்டில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது இந்தப் போட்டியில் அசத்தலாக பந்துவீசிய தென்னாப்ரிக்காவின் ரபாடா இரு இன்னிங்சிலும் சேர்த்து 9 விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கான போட்டியிலும் தென்னாப்ரிக்கா அணி நீடித்து வருகிறது.
இந்த நிலையில், டெஸ்ட் வீரர்களுக்கான தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி., இன்று வெளியிட்டுள்ளது. அதில், நம்பர் ஒன் வீரராக திகழும் பும்ராவை பின்னுக்கு தள்ளி, ரபாடா முதலிடம் பிடித்துள்ளார். 2018ம் ஆண்டு குறுகிய நாட்களே முதலிடத்தில் இருந்த ரபாடா, 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நம்பர் ஒன் இடத்தை பிடித்துள்ளார். 2வது இடத்தில் ஆஸ்திரேலியாவின் ஹசில்வுட்டும், 3வது இடத்தில் பும்ராவும், 4வது இடத்தில் அஸ்வினும் உள்ளனர்.
அதேபோல இங்கிலாந்துக்கு எதிரான ராவல்பிண்டி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அபாரமாக பந்துவீசிய பாகிஸ்தானின் நூமன் அலி 9 விக்கெட்டுக்களை கைப்பற்றினர். இதன்மூலம், 8 இடங்கள் முன்னேறி, முதல்முறையாக டாப் 10க்குள் இடம் பிடித்துள்ளார். 9 இவது இடத்தை பிடித்துள்ள நூமன் அலிக்கு இது தான் சிறந்த தரநிலையாகும். அதேபோல, 10 விக்கெட்டுக்களை வீழ்த்திய சக பாகிஸ்தான் ஸ்பின்னர் சஜித் கான் 10 இடங்கள் முன்னேறி, 38வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்தியாவுக்கு எதிரான புனே டெஸ்ட்டில் நியூசிலாந்தின் வெற்றிக்கு காரணமாக திகழ்ந்த சான்ட்னர் (13 விக்கெட்), 30 இடங்கள் முன்னேறி, 44வது இடத்தை பிடித்துள்ளார். இதுவே அவரது சிறந்த தரவரிசையாகும்.
பேட்டிங்கை பொறுத்தவரையில் இந்தியாவின் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் மீண்டும் 3வது இடத்தை புடித்துள்ளார். நியூசிலாந்தின் ரச்சின் ரவீந்திரா 10வது இடத்தையும் பிடித்துள்ளார். ஜோ ரூட் முதலிடத்தை பிடித்துள்ளார். இந்திய அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு இது மோசமான தரநிலையாகும். கடந்த வாரம் 15வது இடத்தில் இருந்த அவர், 9 இடங்கள் பின்தங்கி, 24வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். அதேபோல, 5வது இடத்தில் இருந்த பண்ட் 11வது இடத்திற்கும், 6வது இடத்தில் விராட் கோலி 14வது இடத்திற்கும் பின்தங்கியுள்ளனர்.
ஆல்ரவுண்டர்களை பொறுத்தவரையில் வங்கதேச வீரர் மெஹிதி ஹாசன் 3வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசைப்பட்டியலில் இந்தியாவின் ஜடேஜா, அஸ்வின் முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.