ரத்தன் டாடா மட்டும் இருந்திருந்தால்... விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வேதனை!
ரத்தன் டாடா மட்டும் இருந்திருந்தால்... விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் வேதனை!
UPDATED : ஆக 11, 2025 02:12 PM
ADDED : ஆக 11, 2025 01:02 PM

புதுடில்லி: ரத்தன் டாடா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான நிவாரணம் வழங்குவதில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டிருக்காது என்று அமெரிக்க வக்கீல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஜூன் 12ம் தேதி ஆமதாபாத்தில் இருந்து புறப்பட்ட ஏர் இந்திய விமானம், சில வினாடிகளிலேயே தனியார் மெடிக்கல் கல்லூரியின் மீது விழுந்து விபத்துக்குள்ளானது. இதில், பயணிகள் 147 பேர் மற்றும் அப்பகுதியைச் சேர்ந்த 19 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.1 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என்று அறிவித்த டாடா குழுமம், நிவாரணத்தை உரிய முறையில் வழங்க 'AI-171 நினைவு மற்றும் நலன் அறக்கட்டளை'யையும் அமைத்தது. முதற்கட்டமாக, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இடைக்கால நிவாரணமாக ரூ.25 லட்சம் வழங்கப்பட்டது.
ஆவண சரிபார்ப்பு பணிகள் உள்ளிட்ட காரணங்களால் பல குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை இன்னும் சென்றடையவில்லை என்று கூறப்படுகிறது. இதனிடையே விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 65 குடும்பங்களின் சார்பு அமெரிக்க வக்கீல் மைக் ஆண்ட்ரூஸ், 'ரத்தன் டாடா மட்டும் உயிரோடு இருந்திருந்தால், விமான விபத்தில் உயிரிழந்தவர்களுக்கான நிவாரணம் வழங்குவதில் இவ்வளவு தாமதம் ஏற்பட்டிருக்காது,' என்று கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது; ரத்தன் டாடா யார் என்பது குறித்து அமெரிக்காவில் கூட நன்கு தெரியும். அவரது வேலை நெறிமுறை, தன்னடக்கம் மற்றும் ஊழியர்களைக் கவனித்துக்கொள்ளும் அணுகுமுறை பற்றி நாங்கள் அறிவோம். அவர் மட்டும் தற்போது இருந்தால், விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், நிவாரணத்தை தாமதமாகப் பெறும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்க மாட்டார்கள்,
படுக்கை படுக்கையாக இருக்கும் ஒருவர், தனது மகனின் உதவியுடன் மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார். அவரது மகன் விமான விபத்தில் இறந்துவிட்டார். இன்னும் இவருக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. இவர்கள் என்ன செய்வது? இப்போது உலகின் கருணையை நம்பியே இருக்க வேண்டியுள்ளது, எனக் கூறினார்.