சீனாவில் குழந்தை பெற்றெடுத்தால் ரூ.45,000 மானியம் கிடைக்கும்
சீனாவில் குழந்தை பெற்றெடுத்தால் ரூ.45,000 மானியம் கிடைக்கும்
ADDED : ஜூலை 30, 2025 11:23 AM
பீஜிங்: சீன அரசு மக்கள் தொகையை பெருக்கும் வகையில், ஒவ்வொரு குழந்தைக்கும், 3 வயது வரை, ஆண்டுக்கு தலா 45,000 ரூபாய் மானியம் அறிவித்துள்ளது.
உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட நாடு பட்டியலில் முதலிடத்தில் இருந்த நம் அண்டை நாடான சீனா, கடந்த 2023ல் அந்த சிறப்பை இந்தியாவிடம் இழந்தது.
அங்கு மக்கள்தொகை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சரிந்து வருகிறது.
குழந்தை பராமரிப்பு, கல்விக்கான செலவு அதிகரித்தது, பொருளாதார மந்தநிலை, போன்ற காரணங்களால், சீனர்கள் திருமணம் செய்து கொள்வது குறைந்து விட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும் 2015 வரை அமலில் இருந்த ஒரு குழந்தை கொள்கையாலும் மக்கள் தொகை குறைந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் சீன அரசு மக்கள் தொகையை அதிகரிப்பதற்கான பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, சீனாவின் பல்வேறு மாகாணங்கள் குழந்தை பராமரிப்பு மானியங்களை வழங்கி வருகின்றன.
இந்த நிலையில், சீனா வை ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி அரசு, தேசிய குழந்தை பராமரிப்பு மானியத்தை முதல்முறையாக அறிவித்துள்ளது.
அதன்படி, ஒரு குடும்பத்தில் உள்ள 3 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ஆண்டுக்கு, 45,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். 3 வயது வரையில், ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகளுக்கு இந்த மானியம் கிடைக்கும்.
இது, இந்தாண்டு ஜன., 1ம் தேதியில் இருந்து அமல்படுத்துவதாகவும் அறிவித்துள்ளது.