ADDED : அக் 28, 2024 04:53 AM

வாஷிங்டன்: சட்ட விரோத குடியேற்றத்துக்கு எதிரானவரும், அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்டு டிரம்ப் ஆதரவாளருமான தொழிலதிபர் எலான் மஸ்க், தன் தொழில் வாழ்க்கையின் துவக்கத்தில், அமெரிக்காவில் சட்ட விரோதமாக பணியாற்றியதாக, 'தி வாஷிங்டன் போஸ்ட்' தெரிவித்துள்ளது.
உலகின் பெரும் பணக்காரர்களில் ஒருவராக, எலான் மஸ்க் உள்ளார்; 'ஸ்பேஸ் எக்ஸ், எக்ஸ், டெஸ்லா' போன்ற பிரபல நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரியான இவர், சட்ட விரோத குடியேற்றத்துக்கு எதிராக தொடர்ந்து கருத்து தெரிவித்து வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் குடியரசு கட்சி வேட்பாளரும், முன்னாள் அதிபருமான டொனால்டு டிரம்பின் ஆதரவாளராகவும் எலான் மஸ்க் உள்ளார்.
இந்நிலையில், பிரபல நாளிதழான தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தி:
தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த எலான் மஸ்க், 1995ல், ஸ்டான்போர்ட் பல்கலையில் படிப்பை நிறுத்தி விட்டு, அமெரிக்காவின் 'ஜிப் 2' என்ற நிறுவனத்தில் நான்கு ஆண்டுகள் வேலை செய்தார்.
இது அவரது முதல் வேலை. இந்த கால கட்டத்தில், முறையான அங்கீகாரம் இல்லாமல் எலான் மஸ்க் பணிபுரிந்துள்ளார். 1997ல், அமெரிக்காவில் பணி செய்வதற்கான அங்கீகாரத்தை அவர் பெற்றார். மாணவர் விசாவில் அவர் அமெரிக்காவில் இருந்தாலும் அது சட்ட விரோதமானது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட விரோத குடியேற்றத்துக்கு எதிராக தொடர்ந்து பேசி வரும் எலான் மஸ்க், அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி வேலை செய்ததாக, தி வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.