சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திரும்பி வந்தனர்
சட்டவிரோதமாக குடியேறிய இந்தியர்கள் திரும்பி வந்தனர்
UPDATED : பிப் 04, 2025 11:37 PM
ADDED : பிப் 04, 2025 11:34 PM

டெக்சாஸ் : அமெரிக்காவில், சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களில், 205 பேரை ராணுவ விமானத்தில் ஏற்றி அனுப்பி வைத்தார், அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப். டெக்சாசின் சான் அன்டோனியோ விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம், பஞ்சாபின் அமிர்தசரஸ் வந்தடைய உள்ளது.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற உடன், சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்களுக்கு எதிராக சாட்டையை சுழற்றினார். மெக்சிகோ எல்லையில் அவசரநிலையை அறிவித்ததுடன், நாடு கடத்தும் நடவடிக்கையையும் முடுக்கிவிட்டார்.
விஸ்வரூபம்
அமெரிக்காவில், 18,000 இந்தியர்கள் சட்ட விரோதமாக குடியேறி இருப்பது தெரியவந்தது. சட்ட விரோதமாக குடியேறியவர்களை இந்தியா திரும்பப் பெறும் என, பிரதமர் நரேந்திர மோடி தன்னிடம் உறுதி அளித்து இருப்பதாக டிரம்ப் தெரிவித்தார்.
இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுப்பதை அறிந்ததும், நம் வெளியுறவுத்துறையும் தீவிரமாக களத்தில் இறங்கியது.
'அமெரிக்கா மட்டுமல்ல, உலகின் எந்த மூலையில் இந்தியர்கள் இருந்தாலும், விசா காலம் முடிந்தோ, முறையான ஆவணங்கள் இன்றியோ தங்கியிருந்தால் அவர்களை திரும்பப் பெறுவோம்.
'அவர்களை திரும்ப அழைத்து வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்போம்' என்று, அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
துவக்கம்
இதற்கிடையே, மத்திய அமெரிக்க நாடுகளான கவுதமாலா, ஹோண்டுராஸ், தென் அமெரிக்க நாடான பெருவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவில் குடியேறியவர்கள் தங்கள் நாட்டுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதை தொடர்ந்து, இந்தியர்களை திருப்பி அனுப்பும் பணியை அமெரிக்க நேற்று துவங்கியது. டெக்சாஸ் மாகாணத்தின் சான் அன்டோனியோ விமான நிலையத்தில் இருந்து, அமெரிக்க விமானப் படையின் சி - 17 விமானத்தில், முதற்கட்டமாக, 205 இந்தியர்களை அனுப்பினர்.
அவர்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்ட அந்த ராணுவ விமானத்தில், ஒரே ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. அது இரவில் பஞ்சாபின் அமிர்தசரஸ் விமான நிலைத்தை வந்தடையும் என அதிகாரிகள் கூறினர்.
சட்ட விரோதமாக குடியேறிய இந்தியர்களை நாடு கடத்தும் பணி தொடரும் என அமெரிக்க அதிகாரிகள் கூறினர். அதிபர் டிரம்பை சந்திக்க பிரதமர் மோடி அடுத்த வாரம் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில், இந்தியர்களை நாடு கடத்தும் நடவடிக்கை ஊடகங்களில் பேசு பொருளாகி உள்ளது.
எத்தனை பேர் திரும்புவர்?
அமெரிக்காவில் 55 லட்சம் இந்தியர்கள் வசிக்கின்றனர். அதில் 8 முதல் 12 லட்சம் பேர் அமெரிக்க அரசால் அங்கீகரிக்கப்படாதவர்கள். சட்ட விரோதமாக குடியேறியவர்கள் என்று டிரம்ப் சொல்வது இவர்களைத்தான்.
ஆண்டுக்கு 30 லட்சம் பேரை எல்லையில் அமெரிக்க போலீஸ் கைது செய்கிறது. அதில் ஒரு லட்சம் பேர் இந்தியர்கள். சிறைக்கு சென்றாலும், சட்ட போராட்டம் நடத்தி குடியுரிமை பெற வழிகள் உண்டு. நீண்ட விசாரணை முடிந்து, வழக்கு தள்ளுபடி ஆகும்போது தான், நாடு கடத்தும் உத்தரவு பிறப்பிக்கப்படும். 18,000 இந்தியர்கள் அந்த உத்தரவை வாங்கி கையில் வைத்திருக்கின்றனர்.
சட்ட அங்கீகாரம் பெறாத லட்சக்கணக்கான மற்ற இந்தியர்களின் நிலை என்ன ஆகும் என்று உடனடியாக தெரியவில்லை. இப்போதே ஏராளமான இந்தியர்கள் போலீசுக்கு பயந்து வேலையை விட்டு நின்று விட்டனர்; அட்ரஸ் மாற்றி தங்கியுள்ளனர்.
சென்ற ஆண்டில் மட்டும் அமெரிக்க வாழ் இந்தியர்கள் சொந்த நாட்டுக்கு அனுப்பிய பணம், 111 பில்லியன் டாலர். ரூபாயில் கிட்டத்தட்ட 10 லட்சம் கோடி. அதில், மேலே சொன்ன 'சட்ட விரோத' இந்தியர்கள் பங்கும் கணிசமானது.
வங்கதேசத்தவரை திருப்பி அனுப்புவதில் மோடி அரசு காட்டும் அதே தீவிரத்தை, மெக்சிகோ, கனடா, இந்தியா பிரஜைகளை திருப்பி அனுப்புவதில் டிரம்ப் அரசு காட்டுகிறது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இந்த கெடுபிடி நடவடிக்கை சரியா தவறா என்பதை காட்டிலும், இதனால் என்னென்ன விளைவுகள் ஏற்படக்கூடும் என்பதை இரு அரசுகளும் உணரவில்லை என்கின்றனர்.