அமெரிக்காவில் ஏ.ஐ., பயன்படுத்தி தில்லுமுல்லு; அமைச்சர் ரூபியோ குரலில் மோசடி செய்ய சதி!
அமெரிக்காவில் ஏ.ஐ., பயன்படுத்தி தில்லுமுல்லு; அமைச்சர் ரூபியோ குரலில் மோசடி செய்ய சதி!
ADDED : ஜூலை 09, 2025 01:09 PM

வாஷிங்டன்: அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோவைப் போல ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டு மற்றும் அமெரிக்க அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள மோசடி கும்பல் ஏ.ஐ.,யை பயன்படுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அமெரிக்காவில் அதிபராக டொனால்டு டிரம்ப் இருந்து வருகிறார். இவரது அமைச்சரவையில் மார்கோ ரூபியோ இடம் பெற்றுள்ளார். இவர் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார். இவரது பெயரில் மோசடி கும்பல் ஏமாற்றும் வேலையில் ஈடுபட்டுள்ளது.
ரூபியோவைப் போல ஆள்மாறாட்டம் செய்து வெளிநாட்டு மற்றும் அமெரிக்க அதிகாரிகளைத் தொடர்பு கொள்ள மோசடி கும்பல் ஏ.ஐ.,யை பயன்படுத்தி உள்ளது. இது குறித்து தகவல் அறிந்து அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சகம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மோசடி கும்பல், ரூபியோவைப் போல, ஏ.ஐ.,யை குரலில், மூன்று வெளியுறவு அமைச்சர்கள், ஒரு அமெரிக்க மூத்த அதிகாரி மற்றும் ஒரு கவர்னரை தொடர்பு கொண்டு பேசி உள்ளது தெரியவந்துள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவுத்துறை மூத்த அதிகாரி கூறியதாவது: தற்போது இந்த விஷயத்தை பற்றி விசாரித்து வருகிறோம்.
எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் தடுக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார். கடந்த ஏப்ரல் மாதத்தில், மோசடி கும்பல் தற்போதைய மற்றும் முன்னாள் மத்திய அல்லது மாநில அரசு அதிகாரிகளிடம் மோசடி செய்ய, மூத்த அமெரிக்க அதிகாரிகளைப் போல ஆள்மாறாட்டம் செய்து வருவதாக, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., எச்சரித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.