இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமில்லை... உலக நாடுகள் தலையிட மகன் கோரிக்கை
இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான ஆதாரமில்லை... உலக நாடுகள் தலையிட மகன் கோரிக்கை
ADDED : நவ 28, 2025 08:30 AM

இஸ்லாமாத்: சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமில்லை என்று அவரது மகன் காசிம் குற்றம் சாட்டியுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், ராவல்பிண்டியில் உள்ள அடியாலா சிறையில் கடந்த 2023ம் ஆண்டு முதல் அடைக்கப்பட்டுள்ளார். ஊழல் வழக்குகள் உட்பட பல்வேறு வழக்குகளில் சிக்கி, தனிமை சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக இம்ரான் கானை சந்திக்க அவரது சகோதரிகள் முயன்றபோதும், பாக்., அதிகாரிகள் அனுமதி தரவில்லை என கூறப்படுகிறது. இதை எதிர்த்து போராட்டமும் நடத்தப்பட்டது.
இதனிடையே, சமூக ஊடகங்களில் அடியாலா சிறையில் இம்ரான் கான் சித்தரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், தன்னுடைய தந்தை உயிருடன் இருப்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் மகன் காசிம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; கடந்த 6 வாரத்திற்கு மேலாக தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ள இம்ரான் கானின் நிலை குறித்து பாகிஸ்தான் அரசு எந்தத் தகவலையும் வெளியிடவில்லை. குடும்பத்தினரை கூட அவரை சந்திக்க அனுமதிக்கவில்லை. இது நீதிமன்ற உத்தரவை மீறிய செயலாகும்.
என்னுடைய தந்தையை கைது செய்து 845 நாட்கள் ஆகின்றன. கடந்த 6 வாரங்களாக தனிமை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். நீதிமன்ற உத்தரவுகள் இருந்தும், இம்ரான் கானின் சகோதரிகள் அவரை சந்திக்க முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இது பாதுகாப்பு நடைமுறை அல்ல, ஒரு திட்டமிட்ட அரசியல் நடவடிக்கை. தார்மீக ரீதியாக இம்ரான் கானைப் பற்றி அரசு பதில் சொல்ல வேண்டும். இந்த விவகாரத்தில் சர்வதேச மனித உரிமை ஆணையம் உள்ளிட்ட அமைப்புகள் தலையிட வேண்டும், இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

