ADDED : டிச 11, 2024 07:26 AM

டமாஸ்கஸ்: சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் படை ஆட்சியை கைப்பற்றியுள்ளதால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது. வேலை உள்ளிட்ட காரணத்திற்காக தங்கியிருந்த இந்தியர்கள் 75 பேர் இந்தியத் தூதரகங்கள் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
மேற்காசிய நாடான சிரியாவில், ஷியா பிரிவைச் சேர்ந்த பஷார் அல் ஆசாத் அதிபராக இருந்தார். இவருக்கும், பல கிளர்ச்சி குழுக்களுக்கும் இடையே, கடந்த 13 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வந்தது. அபு முகமது அல் கோலானி தலைமையிலான ஹயாத் தாஹ்ரிர் அல் ஷாம் என்ற கிளர்ச்சி படை, சமீபத்தில், தலைநகர் டமாஸ்கசை கைப்பற்றியது.
இதையடுத்து நாட்டை விட்டு தனி விமானத்தில் தப்பிய பஷார் அல் ஆசாத் ரஷ்யாவில் தஞ்சமடைந்தார்.
இதனால் அந்த நாட்டில் பதற்றமான சூழல் நிலவுகிறது. வேலை உள்ளிட்ட காரணத்திற்காக சிரியாவில் தங்கியிருந்த இந்தியர்கள் 75 பேர் இந்தியத் தூதரகங்கள் உதவியுடன் மீட்கப்பட்டு, லெபனான் தலைநகர் பெய்ரூட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். விரைவில், இவர்கள் அனைவரும் இந்தியாவுக்கு அழைத்து வரப்பட உள்ளனர். மீட்கப்பட்ட இந்தியர்கள் 75 பேரில், 44 பேர் ஜம்மு காஷ்மீரை சேர்ந்தவர்கள்.
'வெளிநாட்டில் உள்ள இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில், அரசு முன்னுரிமை அளிக்கிறது. அமைதியின்மையை உன்னிப்பாக கண்காணிப்போம்' எனக் கூறிய, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், சிரியாவில் தங்கியிருக்கும் இந்தியர்கள் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தி உள்ளது. அவசர உதவி எண் +963 993385973 அல்லது hoc.damascus@mea.gov.in என்ற மின்னஞ்சலை தொடர்பு கொள்ளலாம்.