ADDED : ஆக 22, 2024 04:34 PM

வார்சா: ‛‛ எந்த பிரச்னைக்கும் தீர்வு காணவும், அமைதியை ஏற்படுத்தவும் நட்பு நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்க இந்தியா தயாராக உள்ளது'', என பிரதமர் மோடி கூறியுள்ளார்.
போலந்து சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் டொனால்ட் டஸ்க்கை சந்தித்து இரு நாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். பிறகு இரு நாட்டு தலைவர்களும் கூட்டாக நிருபர்களை சந்தித்தனர்.
அப்போது பிரதமர் மோடி கூறியதாவது: ஐரோப்பிய யூனியன் மக்கள் தொகைக்கு, இந்தியாவில் தினசரி நடக்கும் யுபிஐ பரிமாற்றம் (எண்ணிக்கையில்) சமமாக உள்ளது. உக்ரைன் போரின் போது, இந்திய மாணவர்களை மீட்க போலந்து செய்த உதவியை இந்திய மக்கள் மறக்க மாட்டார்கள்.
உணவு பதப்படுத்துதலில் போலந்து உலகளவில் முன்னிலையில் உள்ளது. இந்த தொழிலுடன் தொடர்பில் உள்ள போலந்து நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் துவங்க வேண்்டும். நீர்மேலாண்மை, கழிவு பொருட்கள் மேலாண்மை, நகர்ப்புற கட்டமைப்பு உள்ளிட்ட பல துறைகளில் இந்தியாவில் ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அடுத்தாண்டு ஐரோப்பிய யூனியன் தலைவர் பதவியை போலந்து ஏற்க உள்ளது.
இதன் மூலம் இந்தியா - ஐரோப்பிய யூனியன் உறவு வலுப்பெறும். உக்ரைன் போர் மற்றும் மேற்கு ஆசிய மோதல் அனைவருக்கும் கவலையை ஏற்படுத்தி உள்ளது. போர்க்களத்தில் எந்த பிரச்னையையும் தீர்க்க முடியாது என்பதில் இந்தியா உறுதியாக நம்புகிறது. எந்த பிரச்னையிலும் அப்பாவி மக்கள் உயிரிழப்பு ஒட்டு மொத்த மனிதநேயத்திற்கு இழப்பாகி விடும். இந்த விவகாரத்தில் நட்பு நாடுகளுடன் இணைந்து செயல்படவும், ஒத்துழைப்பு வழங்கவும் இந்தியா தயாராக உள்ளது. இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.