நடமாடும் மருத்துவமனையை இலங்கைக்கு அனுப்பிய இந்தியா
நடமாடும் மருத்துவமனையை இலங்கைக்கு அனுப்பிய இந்தியா
ADDED : டிச 04, 2025 01:12 AM

கொழும்பு: 'டிட்வா' புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, நடமாடும் மருத்துவமனை மற்றும் 70-க்கும் மேற்பட்ட மருத்துவ பணியாளர்களை இந்தியா அனுப்பி வைத்துள்ளது.
நம் அண்டை நாடான இலங்கை, 'டிட்வா' புயலால் உருக்குலைந்துள்ளது. அங்கு கனமழையால் ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவுகளால், 465 பேர் உயிரிழந்துள்ளனர்; 366 பேரை காணவில்லை. கடும் பாதிப்பை சந்தித்துள்ள இலங்கைக்கு பல்வேறு நாடுகள் உதவி செய்து வருகின்றன.
அந்த வகையில், 'ஆப்பரேஷன் சாகர் பந்து' திட்டத்தின் மூலம் இலங்கைக்கு நம் நாடு உதவி செய்து வருகிறது. மருந்துகள், உணவு பொருட்கள் உட்பட, 50 டன்னிற்கும் மேலான அத்தியாவசியப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. நம் தேசிய பேரிடர் மீட்புப் படையினரும், பல இடங்களில் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
நம் விமானப்படையின் எம்.ஐ.,- 17 ஹெலிகாப்டர்கள் வாயிலாக, வெள்ளத்தில் சிக்கிய முதியவர்கள், நோயாளிகள், குழந்தைகள் என நுாற்றுக்கணக்கானவர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நடமாடும் மருத்துவமனை மற்றும் 73 மருத்துவப் பணியாளர்களை இலங்கைக்கு இந்தியா அனுப்பி வைத்துள்ளது. நம் விமானப்படையின் போக்குவரத்து விமானம் மூலம், உத்தர பிரதேசத்தின் ஆக்ராவில் இருந்து மருத்துவக் குழு சென்றுள்ளது. இந்த மருத்துவமனையில், தீவிர சிகிச்சை பிரிவு, ஆய்வகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருக்கும்.
இதற்கிடையே, டிட்வா புயலால் இலங்கையில், 62,000 கோடி ரூபாய் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டின் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

