இஸ்ரேல்- - பாலஸ்தீனம் தீர்வுக்கு ஐ.நா.,வில் இந்தியா ஆதரவு
இஸ்ரேல்- - பாலஸ்தீனம் தீர்வுக்கு ஐ.நா.,வில் இந்தியா ஆதரவு
ADDED : ஜூலை 31, 2025 05:07 AM

நியூயார்க்: இஸ்ரேல் - பாலஸ்தீன மோதலுக்கு உடனடியாக தீர்வு காண உலக நாடுகள் கவனம் செலுத்த வேண்டும் என ஐ.நா., மாநாட்டில் இந்தியா மீண்டும் வலியுறுத்தி உள்ளது. இரு தனி தனி நாடுகளே தீர்வு என்பதை ஆதரிப்பதாகவும் கூறியுள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனம் தொடர்பான பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக, ஐ.நா.,வின் உயர்நிலை கூட்டம் மூன்று நாட்களாக நடந்தது. இந்தக் கூட்டத்தை, அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் புறக்கணித்தன.
'நியூயார்க் பிரகடனம்'
கூட்டத்தைத் தொடர்ந்து, பாலஸ்தீன பிரச்னைக்கு அமைதியான தீர்வு மற்றும் இரு- தனி தனி நாடுகளே தீர்வு என்ற தலைப்பில் 'நியூயார்க் பிரகடனம்' என்ற 25 பக்க ஆவணம் வெளியிடப்பட்டது.
அதில், பாலஸ்தீனத்தின் காசாவில் போரை நிறுத்த வேண்டும், காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு அனைத்து பிணைக் கைதிகளையும் விடுவித்து அதன் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டத்தில், இந்தியாவின் ஐ.நா.,வுக்கான நிரந்தர பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் பேசியதாவது:
இஸ்ரேல், பாலஸ்தீனம் என்ற இரு நாடுகள் தீர்வை வரவேற்கிறோம். அதற்கு இந்தியா எப்போதும் ஆதரவாக உள்ளது.
அதே நேரத்தில், இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னையில் எப்படி தீர்வு காண்பது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். காசாவிற்கு மனிதாபிமான உதவிகள் தடை இல்லாமல் செல்ல வேண்டும்.
அரசியல் கூடாது
காசாவில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு உணவு, எரிபொருள் மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் தடையின்றி கிடைக்க வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களின் வாழ்க்கையை மேம்படுத்த மனிதாபிமான உதவி என்பது மிக முக்கியமானது. இதில் அரசியல் இருக்கக்கூடாது. உலக நாடுகள் பேச்சு நடத்தி துாதரகங்கள் வாயிலாக இருநாட்டு பிரசினைக்கு தீர்வு காண வேண்டும். இது வெறும் காகிதத் தீர்வாக இருக்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.