இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது
ADDED : ஜூலை 24, 2025 03:40 PM

லண்டன்: லண்டன் சென்ற பிரதமர் மோடி, பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார். இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இதில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், பிரிட்டன் அமைச்சர் ஜொனாத்தன் ரெனால்ட்ஸ் கையெழுத்து போட்டனர்.
கடந்த மே 6 ம் தேதி இந்தியா - பிரிட்டன் இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கு இரு நாட்டு பிரதமர்களும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடியின் பிரிட்டன் பயணத்தின் போது இது கையெழுத்தாகும் என அறிவிக்கப்பட்டது. இந்த ஒப்பந்தத்திற்கு மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்து இருந்தது.இந்நிலையில், அரசு முறை பயணமாக நேற்று பிரதமர் மோடி பிரிட்டன் கிளம்பி சென்றார்.லண்டனில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, இன்று அவர், பிரிட்டன் பிரதமர் கெயிர் ஸ்டார்மரை சந்தித்து பேசினார். இதில் இரு நாடுகளுக்கு இடையிலான பல முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் பிரிட்டன் வர்த்தகத்துறை அமைச்சர் ஜொனாத்தன் ரெனால்ட்ஸ் ஆகியோர் கையெழுத்து போட்டனர். இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் 36 பில்லியன் அமெரிக்க டாலர் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஒப்பந்தம் முக்கிய சாதனை என்றும், இதன் மூலம் பிரிட்டனில் வேலைவாய்ப்பு மற்றும் வணிக வாய்ப்புகள் அதிகரிக்கும் என கெயிர்ஸ்டார்மர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் அதிகம் முதலீடு செய்யும் நாடுகளில் பிரிட்டன் 6வது இடத்தில் உள்ளது. பிரிட்டனில் ஆயிரம் இந்திய நிறுவனங்கள் உள்ளன. அங்கு ஒரு லட்சம் பேர் பணியாற்றுகின்றனர். தற்போது கையெழுத்தாகி உள்ள ஒப்பந்தம் மூலம் இந்தியாவின் 99 சதவீத பொருட்கள் பிரிட்டன் சந்தையை வரியின்றி அணுக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது. கடந்த 2023- 24 நிதியாண்டில், இரு நாடுகளுக்கு இடையே 21.34 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு வர்த்தகம் நடந்தது. இது அதற்கு முந்தைய ஆண்டை காட்டிலும் அதிகம் ஆகும். இந்த ஒப்பந்தத்துக்கு பிரிட்டன் பார்லிமென்ட் இன்னும் ஒப்புதல் வழங்க வேண்டி உள்ளது.

