பருவநிலை மாறுபாடு நிதி உறுதியை கடைப்பிடிக்க இந்தியா வலியுறுத்தல்
பருவநிலை மாறுபாடு நிதி உறுதியை கடைப்பிடிக்க இந்தியா வலியுறுத்தல்
ADDED : நவ 21, 2024 01:00 AM
பாகு,
பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்கு, வளர்ந்த நாடுகள் தங்களுடைய நிதி உறுதியை கடைப்பிடிக்க வேண்டும் என, இந்தியா வலியுறுத்தியுள்ளது.
பருவநிலை மாறுபாடு மாநாடு, ஆசிய நாடான அஜர்பைஜானில் நடந்து வருகிறது.
இந்த ஆண்டு கூட்டத்தில், பருவநிலை மாறுபாடு பிரச்னைகளில் தீர்வு காண்பதற்கு நாடுகள் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளுக்கான நிதி இலக்கை நிர்ணயிப்பது தொடர்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று நடந்த உயர்நிலை அமைச்சர்கள் அளவிலான ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியக் குழுவின் பிரதிநிதி ராஜஸ்ரீ ரே பேசியதாவது:
பருவநிலை மாறுபாடு பிரச்னைகளால் ஏற்பட்டுஉள்ள தாக்கங்களால் வளரும் நாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வளர்ந்த நாடுகள் இத்தனை ஆண்டுகளாக மேற்கொண்ட நடவடிக்கைகளே, இந்தப் பிரச்னைகளுக்கு முக்கிய காரணம். அதனால் ஏற்பட்ட உமிழ்வுகளே, தற்போதைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளன.
அதீத வெப்பம், பருவம் தவறிய பெரும் மழை என, இயற்கை சீற்றங்களால் மக்களின் வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதில், வளரும் நாடுகளை விட, ஏழை நாடுகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேற்காசிய நாடான யு.ஏ.இ., எனப்படும் ஐக்கிய அரபு எமிரேட்சில் கடந்தாண்டு நடந்த கூட்டத்தில், பருவநிலை மாறுபாடு பிரச்னைகளில், வளரும் நாடுகளுக்கான நிதி உதவிகளை உயர்த்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
தற்போதுள்ள நிதி உதவிகளை பெறுவதில் பல நடைமுறை சிக்கல்கள் உள்ளன. மிக விரிவான, சிக்கலான நடைமுறைகளால், நிதி உதவிகளை பெறுவதற்கு மிகக் கடுமையாக போராட வேண்டியுள்ளது. இந்த நடைமுறைகளை எளிமையாக்க வேண்டும்.
மேலும், வளர்ந்த நாடுகள் தங்களுடைய நிதி பங்களிப்பை முழுமையாக வழங்குவதை உறுதி செய்ய செய்ய வேண்டும். மானியங்கள், கடன்களில் சலுகை போன்றவற்றை வளரும் நாடுகளுக்கு வழங்க வேண்டும்.
பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காண்பதில், ஒவ்வொரு நாட்டுக்கும் இலக்குகள் உள்ளன. அவற்றை நிறைவேற்றுவதில், சொந்த நிதி ஆதாரங்களையே பயன்படுத்தும் நிலையில் இந்தியா உள்ளது.
இலக்குகளை எட்டுவதற்கு, 71.71 லட்சம் கோடி ரூபாய் தேவைப்படும் என ஏற்கனவே நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். அது கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.