படைகளை சீனா நிறுத்தினால் இந்தியாவுக்கு ஆபத்து பலுச் தலைவர் எச்சரிக்கை
படைகளை சீனா நிறுத்தினால் இந்தியாவுக்கு ஆபத்து பலுச் தலைவர் எச்சரிக்கை
ADDED : ஜன 03, 2026 03:10 AM
இஸ்லாமாபாத்: 'பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில், சீனா தன் ராணுவத்தை நிலைநிறுத்தினால் அது இந்தியாவுக்கு ஆபத்தாக அமையும்' என, பலுச் விடுதலைப்படை தலைவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பலுசிஸ்தான் நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பெரிய மாகாணமாக இருக்கிறது. அங்கு பெரும்பான்மையாக இருக்கும் பலுச் இன மக்களை பாக்., அரசு புறக்கணிப்பதாகக் கூறி, தனிநாடாக அறிவிக்க வலியுறுத்தி பல போராளி குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், பலுச் விடுதலைப்படையைச் சேர்ந்த நிர்வாகியும், மனித உரிமை ஆர்வலருமான மிர் யார் பாலோச், நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு எழுதிய கடிதம்:
சீனா -- பாக்., இடையே, சி.பி.இ.சி., எனப்படும், உட்கட்டமைப்பு மற்றும் சாலை இணைப்பு திட்டம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
பலுசிஸ்தான் மாகாணத்தில் சீனா விரைவில் ராணுவத்தை நிலைநிறுத்தலாம். இது, இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக அமையும்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பின் இந்தியா நடத்திய, 'ஆப்பரேஷன் சிந்துார்' நடவடிக்கை பாராட்டுக்குரியது.
பலுசிஸ்தான் மக்கள் ஆக்கிரமிப்பு, பயங்கரவாதம், மனித உரிமை மீறல்களை 79 ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகின்றனர். இதை ஒழித்து நிரந்தர அமைதியை ஏற்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது. எனவே, இந்தியா - பலுசிஸ்தான் இடையே பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

