நாட்டு நலனை பாதுகாக்கும் புத்திசாலித்தனமான தலைவர்: மோடியை பாராட்டும் புடின்
நாட்டு நலனை பாதுகாக்கும் புத்திசாலித்தனமான தலைவர்: மோடியை பாராட்டும் புடின்
UPDATED : அக் 03, 2025 11:56 AM
ADDED : அக் 03, 2025 07:14 AM

மாஸ்கோ: ''பிரதமர் மோடி இந்திய நலன்களை பாதுகாக்கும் புத்திசாலித்தனமான தலைவர்'' என ரஷ்ய அதிபர் புடின் பாராட்டி உள்ளார்.
சோச்சி நகரில் நடந்த ரஷ்ய நிபுணர்கள் கூட்டத்தில், ரஷ்ய அதிபர் புடின் பேசியதாவது: ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது அதிக வரி விதிப்பது உலக அளவில் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும். இந்தியா மற்றும் சீனா மீது வரிகளை விதிக்கும் டிரம்பின் நடவடிக்கை மிகப்பெரிய தோல்வியை தழுவும். வரி விதிப்பது உலகளாவிய பண வீக்கத்திற்கு வழிவகுக்கும்.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சியை பாதிக்கும். மேற்கத்திய நாடுகள் தடை விதித்த போதிலும், நேர்மையான பொருளாதார வளர்ச்சியை தக்க வைத்துக்கொள்வதே ரஷ்யாவின் நோக்கமாகும். இந்தியா ஒருபோதும் தன்னை அவமானப்படுத்த அனுமதிக்காது. பிரதமர் மோடியை அறிவேன். அவர் ஒருபோதும் தவறான முடிவுகளை எடுக்க மாட்டார்.
இந்தியாவும், சீனாவும் ஒரு சார்பான முடிவுகளை எடுக்க மறுத்துவிட்டன. அவர்கள் நேர்மையான உலகை படைக்க விரும்புகின்றனர். பிரதமர் மோடி இந்திய நலன்களை பாதுகாக்கும், நேர்மையான புத்திசாலித்தனமான தலைவர்.
உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும். போர்க்களத்தில் எங்களது நிலைப்பாட்டை மாற்றி கொள்ள மாட்டோம். ரஷ்யாவிற்கும் இந்தியாவிற்கும் இடையே எந்தப் பிரச்னையோ, பதட்டமோ ஏற்பட்டது இல்லை. பிரதமர் மோடி தனது நண்பர். எங்கள் வெளியுறவு அமைச்சகங்கள் நெருக்கமாக இணைந்து செயல்பட்டு வருகின்றன. இவ்வாறு அதிபர் புடின் கூறினார்.