ADDED : ஜூலை 09, 2025 01:35 AM

பர்காஸ்: பல்கேரியாவில் 'குடோ' உலக கோப்பை தொடர் நடந்தது. கராத்தே, ஜூடோ, குத்துச்சண்டை உள்ளிட்ட போட்டிகள் இணைந்த ஜப்பானின் பாரம்பரிய கலை இது. பெண்களுக்கான 11 வயது பிரிவில் இந்தியாவின் ருத்ரானி படேல், பைனலில் பல்கேரியாவின் சியானாவை சாய்த்து தங்கம் கைப்பற்றினார்.
மற்றொரு வீராங்கனை அனன்யா வெண்கலம் வென்றார். 16 வயது பிரிவில் இந்தியாவின் பேமா, தங்கம் வசப்படுத்தினார். மற்ற போட்டிகளில் பைனலில் வீழ்ந்த மான்சி (13 வயது), ஆராத்யா (19), பிரியா குமாரி (சீனியர்) வெள்ளி வென்றனர்.
ஆண்களுக்கான சீனியர் பிரிவில் இந்தியா சார்பில் மத்திய பிரதேசத்தின் சொகைல் கான் பங்கேற்றார். உலகத் தரவரிசையில் 12வது இடத்திலுள்ள இவர், பைனலில் பிரான்சின் குயின்டனிடம் வீழ்ந்து, வெள்ளி கைப்பற்றினார். தவிர திலிப் (16, -48 கிலோ), ஜிடான் விப்சி (-68), நகுல் ரோவர் (19), பாபுலால் சவுத்ரி (-270) வெள்ளி வென்றனர்.
இத்தொடரில் இந்தியா 2 தங்கம், 8 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கம் கைப்பற்றியது.