ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; மீண்டும் தொடங்கிய இந்திய நிறுவனங்கள்
ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல்; மீண்டும் தொடங்கிய இந்திய நிறுவனங்கள்
ADDED : ஆக 20, 2025 03:15 PM

லண்டன்: அமெரிக்காவின் வரி விதிப்பு அச்சுறுத்தலுக்கு பிறகு சில வாரங்கள் நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை மீண்டும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதாக கூறி, இந்தியாவுக்கு 25 சதவீதம் வரி விதித்த அமெரிக்க அதிபர் டிரம்ப், அபராத வரி என்ற பெயரில் மேலும் 25 சதவீதம் கூடுதல் வரி விதித்தார்.
இந்நிலையில், இந்திய எண்ணெய் நிறுவனங்கள் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்தி விட்டதாக தகவல் வெளியானது. இதை, டிரம்ப் பெருமையுடன் கூறியிருந்தார்.
ஆனால், ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதல் செய்ததற்கும், செய்யாமல் இருப்பதற்கும் சர்வதேச சந்தை விலை தான் காரணம், டிரம்ப் அச்சுறுத்தல் காரணம் இல்லை என்று இந்திய நிறுவனங்கள் தெரிவித்திருந்தன.இந்நிலையில் சில வாரங்களாக நிறுத்தப்பட்டிருந்த ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலை மீண்டும் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தொடங்கியுள்ளன.
இந்தாண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதம் டெலிவரி பெறும் வகையில் ரஷ்ய கச்சா எண்ணெயை சர்வதேச சந்தையில் இந்திய நிறுவனங்கள் வாங்கத் தொடங்கியுள்ளன.இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் ஆகியவை இவ்வாறு கொள்முதல் செய்துள்ளன. ஏற்கனவே இந்திய நிறுவனங்கள் கொள்முதலை நிறுத்தியபோது, ரஷ்யாவின் தள்ளுபடி 1.5 டாலராக இருந்தது. இப்போது தள்ளுபடி 3 டாலராக அதிகரித்துள்ளது.
இதுவே ரஷ்ய கச்சா எண்ணெய் கொள்முதலுக்கு காரணம் என்று இந்திய நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.'விலை நிலவரம் பொறுத்து ரஷ்ய கச்சா எண்ணெயை தொடர்ந்து கொள்முதல் செய்வோம்' என்று இந்தியன் ஆயில் நிறுவனம் திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.