ADDED : ஏப் 14, 2025 04:12 AM

கீவ் : உக்ரைனில் ரஷ்ய படைகள் நடத்திய ஏவுகணை தாக்குதலில், இந்திய மருந்து நிறுவனத்தின் கிடங்கு பலத்த சேதமடைந்தது.
தீவிர பேச்சு
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் - ரஷ்யா இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேல் போர் நடந்து வருகிறது. இந்த போரை நிறுத்துவது தொடர்பாக, இரு நாடுகளிடமும் அமெரிக்க அரசு தீவிரமாக பேச்சு நடத்தி வருகிறது. எனினும், உக்ரைன் - ரஷ்யா இடையே தொடர்ந்து சண்டை நீடிக்கிறது.
உக்ரைன் தலைநகர் கீவ் நகரை குறிவைத்து, ரஷ்ய படைகள் நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தின.
இதில், கீவ் நகரில் செயல்பட்ட நம் நாட்டைச் சேர்ந்த, 'குசும்' என்ற மருந்து நிறுவனத்தின் கிடங்கு பலத்த சேதமடைந்தது. இதில், 130 கோடி ரூபாய் மதிப்பு மருந்துகள் வீணாகின.
கீவ் நகரில் உள்ள அன்டோனோவின் தொழிற்சாலையை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், தவறுதலாக, குசும் நிறுவனத்தின் கிடங்கு அழிக்கப்பட்டு விட்டதாகவும் ரஷ்ய வட்டாரங்கள் கூறின.
21 பேர் பலி
உக்ரைனில் உள்ள சுமி நகரில், குருத்தோலை திருநாளை கொண்டாட நுாற்றுக்கணக்கான மக்கள் நேற்று காலை குவிந்தனர். அப்போது அப்பகுதியை குறிவைத்து, ஏவுகணைகளை ரஷ்யா ஏவியது. இந்த தாக்குதலில், ஐந்து குழந்தைகள் உட்பட 21 பேர் உயிரிழந்தனர்.

