ADDED : மார் 03, 2024 02:34 AM

வாஷிங்டன் : அமெரிக்காவில், இந்திய நடனக் கலைஞர் அமர்நாத் கோஷ், 34, மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
மேற்கு வங்கத்தின் கோல்கட்டாவைச் சேர்ந்த, தொழில் முறை பரத நாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞரான அமர்நாத் கோஷ், தமிழகத்தின் சென்னையில் உள்ள கலாஷேத்ரா அகாடமியின் முன்னாள் மாணவர்.
இவர், அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தின் செயின்ட் லுாயிசில் உள்ள வாஷிங்டன் பல்கலையில் நடனத்தில், எம்.எப்.ஏ., பட்டப் படிப்பை மேற்கொண்டிருந்தார்.
இந்நிலையில், பிப்., 27ம் தேதி மாலை, செயின்ட் லுாயிஸ் நகரில் நடைபயிற்சி மேற்கொண்ட நடனக் கலைஞர் அமர்நாத் கோஷை, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக, அவரது தோழி தேவோலீனா பட்டாசார்ஜி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட பதிவு:
என் நண்பர் அமர்நாத் கோஷ் செயின்ட் லுாயிஸ் அகாடமியில் சுட்டுக் கொல்லப்பட்டார். அங்குள்ள சில நண்பர்கள் அவரது உடலைக் கைப்பற்ற முயற்சி செய்கின்றனர்.
அமெரிக்காவில் உள்ள இந்தியத் துாதரகம் முடிந்தவரை உதவி செய்ய வேண்டும். குறைந்தபட்சம் அமர்நாத் கோஷின் கொலைக்கான காரணத்தை தெரிந்து கொள்ள விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

