பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியாமல் குவைத்தில் தவிக்கும் இந்தியர் போக்குவரத்து விதிமீறல் வழக்கால் சிக்கல்
பாஸ்போர்ட் புதுப்பிக்க முடியாமல் குவைத்தில் தவிக்கும் இந்தியர் போக்குவரத்து விதிமீறல் வழக்கால் சிக்கல்
ADDED : நவ 24, 2025 01:49 AM
துபாய்: மேற்காசிய நாடான குவைத்தில், 25 ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் குஜராத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான மோசின் சுர்தி, போக்குவரத்து விதிமீறல் வழக்கால் பாஸ்போர்ட்டை இழக்கும் அச்சத்தில் உள்ளார்.
காலாவதி குஜராத்தைச் சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியரான மோசின் சுர்தி, 46, என்பவர், குவைத்தில், 25 ஆண்டுகளாக உரிய விசா மற்றும் ஆவணங்களுடன் பணிபுரிந்து வருகிறார். அவரது பாஸ்போர்ட், 2026 ஜன., 30ம் தேதியுடன் காலாவதி ஆகிறது.
இதையடுத்து, குவைத்தில் உள்ள இந்திய துாதரகத்தில், கடந்த ஆகஸ்டில் தன் பாஸ்போர்ட்டை புதுப்பிக்க மோசின் சுர்தி விண்ணப்பித்தார்.
இதை நிராகரித்த துாதரகம், குஜராத்தில் அவர் மீதான போக்குவரத்து விதிமீறல் வழக்கை மேற்கோள்காட்டியது. மேலும், வழக்கை முடித்து விட்டு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்கும் பட்சத்தில், பாஸ்போர்ட் புதுப்பித்து தரப்படும் என்றும் துாதரகம் தெரிவித்தது.
மோசின் சுர்தி, 2024ல், இந்தியாவுக்கு வந்த போது, ஒரு வழிப்பாதையில் எதிர் திசையில் பயணித்ததாக, குஜராத்தின் லுனாவாடா போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
விசாரணை வழக்கறிஞர் மூலம் இதை முடித்து விட்டதாக நம்பி மீண்டும் குவைத் சென்ற அவர், பாஸ்போர்ட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த போது தான், வழக்கு முடிக்கப்படாமல் இருப்பது அவருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து, தன் மனைவி மூலம் குஜராத் உயர் நீதிமன்றத்தில் மோசின் சுர்தி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

