UPDATED : செப் 04, 2026 08:31 PM
ADDED : செப் 04, 2026 05:52 PM
வாஷிங்டன்:
அமெரிக்காவில், நிதி மோசடியில் ஈடுபட்ட இந்திய வம்சாவளி நபரை, மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் அந்நாடு சேர்த்துள்ளது.
நம் நாட்டில் பிறந்து அமெரிக்கக் குடியுரிமை பெற்று, அங்கு வசித்த மஞ்சித் சிங் பேடி என்பவர், வாஷிங்டன் மாகாணத்தின் டாகோமா நகரில், மளிகைக் கடை நடத்தி வந்தார். ஏழை எளிய மக்களுக்கான அமெரிக்க அரசின், 'ஸ்னாப்' எனப்படும் உணவு மற்றும் ஊட்டச்சத்து உதவித் திட்டத்தின் கீழ் இக்கடை செயல்பட்டுள்ளது.
அத்திட்டத்தில் பயன்பெறும் வாடிக்கையாளர்களுக்கு, உணவுப் பொருட்கள் வழங்குவதற்கு பதில், அவர் ரொக்கமாக பணத்தை வழங்கி உள்ளார். இதற்கு அவர் கமிஷனும் வாங்கி உள்ளார். 2024 மார்ச் - 2025 ஜூன் வரை, 5.3 கோடி ரூபாய் அளவுக்கு அவர் அரசு நிதியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்த வழக்கில், பாஸ்போர்ட்டை ஒப்படைத்து வாஷிங்டனில் தங்க வேண்டும் என, மஞ்சித் சிங் பேடிக்கு அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை மீறிய அவர், காரிலேயே கனடா எல்லைக்குச் சென்று, அங்கிருந்து இந்தியாவுக்கு தப்பிச் சென்றதாக, அமெரிக்காவன் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மஞ்சித் சிங் பேடியை, மிகவும் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் எப்.பி.ஐ., சேர்த்துள்ளது. அவரை பற்றிய தகவல்களை வழங்குவோருக்கு, 1.3 கோடி ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
