விமான விபத்தில் இந்திய வம்சாவளி டாக்டர் உட்பட இருவர் உயிரிழப்பு
விமான விபத்தில் இந்திய வம்சாவளி டாக்டர் உட்பட இருவர் உயிரிழப்பு
ADDED : ஜன 01, 2025 08:00 AM

அபுதாபி: ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலகுரக விமானம் விபத்தில், இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர் உட்பட இருவர் உயிரிழந்தனர்.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இலகுரக விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த டாக்டர் உட்பட இருவர் உயிரிழந்தனர். விமானி மற்றும் துணை விமானி இருவரும் உயிரிழந்தனர். இந்திய வம்சாவளியை சேர்ந்த டாக்டர், சுலைமான் அல் மஜித் இங்கிலாந்தில் உள்ள கவுண்டி டர்ஹாம் மற்றும் டார்லிங்டன் என்ஹெச்எஸ் அறக்கட்டளையில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
அவரது தந்தை, தாய் மற்றும் இளைய சகோதரர் ஆகியோருடன் விமானத்தில் பயணிக்க திட்டமிட்டு இருந்தார். குடும்பத்தினரை அழைத்துச் செல்வதற்கு முன்னதாக தான் மட்டும் ஒருமுறை பறந்து பார்க்க ஆசைப்பட்ட சுலைமான் விபத்தில் சிக்கினார். பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது குடும்பத்தினர் கண் முன்னிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சுலைமானின் தந்தை கூறியதாவது: புத்தாண்டை ஒரு குடும்பமாக நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம், ஒன்றாகக் கொண்டாட திட்டமிட்டோம். மாறாக, எங்கள் வாழ்வு சிதைந்து விட்டது. காலம் நமக்காக நின்று போனது போன்ற உணர்வு. சுலைமான் எங்கள் வாழ்க்கையின் ஒளியாக இருந்தார், அவர் இல்லாமல் எப்படி முன்னேறுவது என்று எங்களுக்குத் தெரியவில்லை. இவ்வாறு அனர் கண்ணீர் மல்க தெரிவித்தார்.