இந்திய வம்சாவளி இன்ஜினியர் மர்ம மரணம்; எப்.பி.ஐ., விசாரணை கோரும் தாய்; எலான் மஸ்க் ஆதரவு
இந்திய வம்சாவளி இன்ஜினியர் மர்ம மரணம்; எப்.பி.ஐ., விசாரணை கோரும் தாய்; எலான் மஸ்க் ஆதரவு
ADDED : டிச 30, 2024 09:41 AM

சான் பிரான்ஸிஸ்கோ: இந்திய வம்சாவளியை சேர்ந்த ஓபன் ஏ.ஐ., இன்ஜினியர் மர்ம மரணம் குறித்து எப்.பி.ஐ., விசாரணை கோரும் அவரது தாயாருக்கு, முன்னணி தொழிலதிபர் எலான் மஸ்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.
சான் பிரான்ஸிஸ்கோவைச் சேர்ந்த இளம் ஓபன் ஏ.ஐ., இன்ஜினியர் சுஜிர் பாலாஜி. இந்திய வம்சாவளியை சேர்ந்த இவர், தனது அபார்ட்மென்டின் கழிவறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். போலீசார், மருத்துவ பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில், தற்கொலை என்று அறிவித்தனர்.
ஆனால், தனது மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், தனியார் மருத்துவமனையின் பிரேத பரிசோதனை முடிவில் மரணத்திற்கான உண்மை தெரியப்படுத்தவில்லை என்று கூறிய அவரது தாயார் பூர்ணிமா ராமாராவ், எப்.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில், 'கழிவறையில் ரத்த காயங்களுடன் மகன் உயிரிழந்து கிடந்துள்ளார். யாரோ அவரை தாக்கி கொலை செய்திருக்கலாம். ஆனால், தற்கொலை என்று கூறுகிறார்கள். எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும். எப்.பி.ஐ., விசாரணை நடத்த வேண்டும்,' எனக் குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தப் பதிவை டேக் செய்த எக்ஸ் தளத்தின் உரிமையாளரும், பிரபல பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க், 'இது தற்கொலை போல தெரியவில்லை', எனக் குறிப்பிட்டுள்ளார்.

