வெள்ளை மாளிகையை தகர்க்க முயற்சி இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை
வெள்ளை மாளிகையை தகர்க்க முயற்சி இந்திய வம்சாவளி இளைஞருக்கு சிறை
UPDATED : ஜன 18, 2025 07:52 AM
ADDED : ஜன 18, 2025 12:31 AM

வாஷிங்டன்: அமெரிக்காவின் வெள்ளை மாளிகை மீது டிரக்கை மோதச் செய்து தாக்குதல் நடத்த முயன்ற இந்திய வம்சாவளி இளைஞர் சாய் வர்ஷித் கந்துலா, 20, என்ற இளைஞருக்கு, எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதில் பிறந்தவர் சாய் வர்ஷித் கந்துலா. இவர், அமெரிக்காவின் க்ரீன் கார்டு எனப்படும் நிரந்தர குடியுரிமை பெற்று மிசோரி மாகாணத்தில் வசித்து வந்தார்.
இவர் கடந்த 2023, மே 22ல், டல்லஸ் நகருக்கு விமானத்தில் வந்தார். அங்கு ஒரு டிரக்கை வாடகைக்கு எடுத்துக் கொண்டு, வாஷிங்டன் டி.சி.,க்கு ஓட்டி வந்தார்.
நேராக அமெரிக்க அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லமான வெள்ளை மாளிகைக்கு டிரக்குடன் வந்த சாய் வர்ஷித், அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகளை இடித்து தள்ளியபடி முன்னேற முயன்றார்.
ஆனால், தடுப்பில் மோதி வாகனம் செயலிழந்தது. இதையடுத்து, டிரக்கில் இருந்து இறங்கிய சாய், தன் பையில் இருந்து ஜெர்மனியின் நாஜி கொடியை வெளியே எடுத்து பறக்க விட்டார்.
அவரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கு, மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
விசாரணையில், சாய் வர்ஷித் இந்த தாக்குதலுக்காக பல வாரங்களாக திட்டம் தீட்டியது தெரிந்தது.
இந்த வழக்கில் சாய் வர்ஷித் குற்றவாளி என ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்ட நிலையில், நேற்று மாவட்ட நீதிபதி தண்டனையை அறிவித்தார்.
அப்போது, 'ஜனநாயகப் பூர்வமாக தேர்வு செய்யப்பட்ட அமெரிக்க அரசை அகற்றிவிட்டு, நாஜி கொள்கையான சர்வாதிகாரத்தை கொண்டு வருவதே தாக்குதல் நடத்தியவரின் நோக்கம் என்பது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டதால், எட்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது' என கூறினார்.