அமெரிக்க ரகசிய ஆவணங்கள் பதுக்கல் குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது
அமெரிக்க ரகசிய ஆவணங்கள் பதுக்கல் குற்றச்சாட்டு: இந்திய வம்சாவளி ஆலோசகர் கைது
ADDED : அக் 15, 2025 10:48 AM

வாஷிங்டன்; அமெரிக்க விமானப்படை ரகசிய ஆவணங்கள், சீன அதிகாரிகளுடன் சந்திப்பு ஆகிய குற்றச்சாட்டுகள் அடிப்படையில் இந்திய வம்சாவளி ஆலோசகர் ஆஷ்லே டெல்லிஸ் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதுபற்றிய விவரம் வருமாறு;
64 வயதான ஆஷ்லே டெல்லிஸ். மும்பையில் பிறந்தவர். இந்திய வம்சாவளியான அவர் அமெரிக்க ஆய்வாளர் மற்றும் தெற்காசிய வெளியுறவுக் கொள்கையின் ஆலோசகராக உள்ளார்.
2001ம் ஆண்டு முதல் அமெரிக்காவில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தவர். அந்நாட்டு முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் பதவிக் காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் பணியாற்றியவர். இந்தியா மற்றும் தெற்காசிய விவகாரங்களில் நீண்டகாலம் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
ஆஷ்லே டெல்லிஸ் மீது அமெரிக்காவின் விமானப்படை தொடர்பான ரகசிய ஆவணங்களை பதுக்கினார் என்றும், சீன அரசு அதிகாரிகளுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளின் பேரில், விர்ஜினியாவில் உள்ள அவரது வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.
நீதிமன்ற அனுமதியுடன் நடத்தப்பட்ட இந்த சோதனையில், ஆயிரம் பக்கங்களுக்கு மேலான தேசிய பாதுகாப்பு தொடர்பு பற்றிய ரகசிய ஆவணங்களை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளனர். தமது வீட்டின் கீழ்தளம் மற்றும் முழுவதும் கட்டி முடிக்கப்படாத இருப்பு அறையில் 3 பெரிய கருப்பு பைகளில் இந்த ஆவணங்களை பதுக்கி இருப்பதையும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.
இதையடுத்து ஆஷ்லே டெல்லிஸ், அரசு தொடர்பான தகவல்களை சட்ட விரோதமாக வைத்திருந்தார் என்று குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு இருப்பதாக வெர்ஜினியா கிழக்கு மாவட்ட அமெரிக்க வக்கீல் அலுவலகம் அறிவித்துள்ளது.
மேலும், 2002ம் ஆண்டு செப்டம்பர் முதல் 2025ம் ஆண்டு செப்டம்பர் வரை விர்ஜினியாவின் பேர்பாக்ஸ் (Fairfax) என்ற நகரத்தில் உள்ள பிரபல உணவகத்தில் சீன அரசு அதிகாரிகளை ஆஷ்லே டெல்லிஸ் சந்தித்துள்ளார் என்றும் கூறியுள்ளது.
இதுதவிர, அக்டோபர் 10ம் தேதி அலெக்சாண்ட்ரியாவில் உள்ள வளாகம் ஒன்றில் ஏராளமான ஆவணங்களை தமது பையில் மறைத்து வைத்து ஆஷ்லே டெல்லிஸ் சென்றது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் தெளிவாக தெரிந்திருக்கிறது.
அதன் பின்னர் அக்டோபர் 11ம் தேதி அவரது வீட்டில் சோதனை நடத்த போலீசாருக்கு முறைப்படி அனுமதி அளிக்கப்பட்டது. அன்றைய தினம், ஆஷ்லே டெல்லிஸ் குடும்பத்துடன் அலுவல் வேலையாக ரோம் செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தார்.
அவர் மீதான குற்றம் உரிய ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படும் வரை குற்றமற்றவராகவே கருதப்படுவார். அதே நேரத்தில் குற்றம் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டால் 10 ஆண்டுகள் சிறை, ரூ.2,21,50,080 அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.