ADDED : நவ 24, 2025 06:54 PM

ஒட்டாவா: கனடாவில் மிகவும் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இருந்த 24 வயது இந்திய வம்சாவளி வாலிபர், ஒன்றரை ஆண்டுக்கு பிறகு இன்று கைது செய்யப்பட்டார்.
கனடாவில் மிகவும் தேடப்படும் நபர்களின் பட்டியலில் இந்திய வம்சாவளி வாலிபரான நிக்கோலஸ் சிங் 24, என்பவர் இருந்தார். அவர் மீது ஆயுத கொள்ளை , தடை உத்தரவுக்கு முரணாக ஆயுதம் வைத்திருந்த குற்றச்சாட்டுகள் இருந்தன. ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக சிறைத்தண்டனை அனுபவித்து வந்த நிலையில், கடந்த மே 31, 2024 அன்று தலைமறைவானார். பரோல் விதிமுறைகளை மீறியதற்காக அவரை கைது செய்ய கனடா முழுவதும் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நவம்பர் 21 ம் தேதி இரவு டொராண்டோவில் உள்ள பாத்தர்ஸ்ட், டுபோன்ட் தெருக்களுக்கு அருகே, நிக்கோலஸ் சிங், வாகனத்தில் சுற்றிவருவதாக தகவல் கிடைத்ததை அடுத்து, போலீசார் கைது செய்தனர்.
போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது:
கைது செய்யப்பட்ட நிக்கோலஸ் சிங்கிடம், துப்பாக்கி, துப்பாக்கி உறை, தோட்டாக்கள் கைப்பற்றப்பட்டது. அவர் மீது 6 கூடுதல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. கனடாவில் மிகவும் தேடப்படும் குற்றவாளிகளில் நிக்கோலஸ் சிங்,15வது இடத்தில் உள்ளவர். எந்தவித அசம்பாவிதமும் இன்றி அவரது கைது நடவடிக்கை இருந்தது.
இவ்வாறு போலீஸ் அதிகாரிகள் கூறினர்.

