பஸ் ஆற்றில் கவிழ்ந்தது: நேபாளத்தில் இந்தியர்கள் 14 பேர் பலி
பஸ் ஆற்றில் கவிழ்ந்தது: நேபாளத்தில் இந்தியர்கள் 14 பேர் பலி
UPDATED : ஆக 23, 2024 02:06 PM
ADDED : ஆக 23, 2024 12:49 PM

காத்மாண்டு: நேபாளத்தில் இந்திய சுற்றுலாப்பயணிகள் சென்ற பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், 14 பேர் பலியாகினர்.
நேபாளத்தில் பொக்காராவில் இருந்து காத்மாண்டு நோக்கி 40 பேர் இந்தியர்கள் பஸ்சில் சென்று கொண்டிருந்தனர். தனாஹூன் மாவட்டத்தில் உள்ள மார்ஸ்யாங்டி ஆற்றின் அருகேயுள்ள பாதையில் சென்றபோது பஸ் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது.
16 பேர் மீட்பு
பயணிகள் தண்ணீரில் மூழ்கினர். மீட்புப்பணிகளை உள்ளூர் மாவட்ட நிர்வாகம் முடுக்கி விட்டுள்ளது. உள்ளூர் நீச்சல் வீரர்கள் உதவியுடன் ஆற்றில் விழுந்த 16 பேர் மீட்கப்பட்டனர். 14 பேர் உயிரிழந்த நிலையில், அவர்களது உடல்கள் மீட்கப்பட்டன. மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.
விபத்துக்கு காரணம் என்ன?
நெடுஞ்சாலை பஸ் வந்து கொண்டிருந்த போது திடீரென நிலச்சரிவு ஏற்பட்டு உள்ளது. பஸ் மீது பாறைகள், மண் கொட்ட, சாலையில் இருந்து அப்படியே ஆற்றில் விழுந்துள்ளது. காலநிலை மாற்றம், இயற்கை சீற்றத்தால் ஏற்பட்ட இதுபோன்ற விபத்துகளினால் கடந்த ஜூலை மாதம் வரை 62 பேர் பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

