ADDED : ஏப் 06, 2025 12:33 AM
ஒட்டாவா: கனடாவில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வட அமெரிக்க நாடான கனடாவின் தலைநகர் ஒட்டாவா அருகே இந்தியர் ஒருவர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டதாகவும், சந்தேகத்தின் அடிப்படையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாகவும், அந்நாட்டிற்கான இந்திய துாதரகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் குறித்து கனடா போலீசார் கூறுகையில், 'ஒட்டாவாவில் இருந்து 40 கி.மீ., தொலைவில் உள்ள ராக்லேண்டின் லாலாண்டே தெருவில், கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் இறந்து கிடந்த ஒருவரின் உடலை கண்டுபிடித்தோம்.
இந்த சம்பவத்தில், பொதுமக்கள் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை. ஆரம்பகட்ட விசாரணை நடப்பதால், கூடுதல் தகவல்கள் வழங்க முடியாது' என்றனர்.
காவலில் உள்ள நபர் மீது என்ன குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுஉள்ளன என்பதையும் கூற போலீசார் மறுத்துவிட்டனர்.
இது தொடர்பாக இந்திய துாதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஒட்டாவா அருகே உள்ள ராக்லேண்டில் இந்தியர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இது, மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
'இது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இறந்தவர்களின் உறவினர்கள் கண்டறியப்பட்டு, தேவையான அனைத்து உதவிகளும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என கூறப்பட்டுள்ளது. உயிர்இழந்தவர் குறித்த விபரங்கள் எதுவும் வழங்கப்படவில்லை.

