ADDED : பிப் 15, 2026 12:40 AM

நியூயார்க்: அமெரிக்காவில் படித்து வரும் இந்திய மாணவர் மாயமான நிலையில், அவரைத் தேடும் பணி ஐந்தாவது நாளாக நீடித்து வருகிறது.
கர்நாடகாவைச் சேர்ந்த சாகேத் ஸ்ரீனிவாசையா, 22, சென்னை ஐ.ஐ.டி.,யில் கடந்த ஆண்டு பட்டம் பெற்றார்.
மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்ற அவர், கலிபோர்னியா மாகாணத்தின் பெர்க்லி நகரில் உள்ள யுனிவர்சிட்டி ஆப் கலிபோர்னியாவில், வேதியியல் மற்றும் பயோ மாலிகுலர் பொறியியல் பிரிவில் முதுநிலைப் படிப்பு படித்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 9ம் தேதி முதல் சாகேத் ஸ்ரீனிவாசையாவை காணவில்லை. சக நண்பர்கள் அளித்த புகாரின் பேரில் போலீசார் அவரை தேடினர்.
அவரது பாஸ்போர்ட் மற்றும் லேப்டாப் இருந்த பை, பார்க் ஹில்ஸ் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. கடைசியாக, டுவைட் வேயின் 1700 பிளாக்கில் காணப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
சாகேத் ஸ்ரீனிவாசையாவை கண்டுபிடிக்க, பெர்க்லி போலீசார் பொதுமக்களின் உதவியையும் நாடியுள்ளனர். ஐந்தாவது நாளாக போலீசார் அவரை தேடி வருகின்றனர். இது குறித்து, சான் பிரான்சிஸ்கோவில் உள்ள நம் துாதரகம் ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 'மாணவர் சாகேத் ஸ்ரீனிவாசையா குடும்பத்தினருடன் தொடர்பில் உள்ளோம். அவரைக் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு வருகிறோம்' என்று, நம் துாதரகம் தெரிவித்துள்ளது.

