அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகராக இந்திய ஆதரவாளர் வால்ட்ஸ் தேர்வு?
அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகராக இந்திய ஆதரவாளர் வால்ட்ஸ் தேர்வு?
ADDED : நவ 13, 2024 12:31 AM

வாஷிங்டன் : அமெரிக்காவின் அதிபராக தேர்வாகியுள்ள டொனால்டு டிரம்ப் அரசில், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக, இந்திய ஆதரவாளரான மைக்கேல் வால்ட்ஸ் நியமிக்கப்பட உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஆலோசனை
அமெரிக்காவில் சமீபத்தில் நடந்த அதிபர் தேர்தலில், முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் அபார வெற்றி பெற்றார். அடுத்தாண்டு, ஜன., 20ல் அதிபராக பதவியேற்க உள்ளார்.
இதற்கிடையே, புதிய அரசில் யார் யாருக்கு, எந்த பொறுப்பு கிடைக்கும் என்பது தொடர்பான ஆலோசனை நடந்து வருகிறது.
முன்னாள் ராணுவ அதிகாரியும், மக்கள் பிரதிநிதிகள் சபை எம்.பி.,யுமான மைக்கேல் வால்ட்ஸ், தேசிய பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரம்பின் தீவிர ஆதரவாளரான இவர், சீனாவுக்கு எதிரான கொள்கை உள்ளவர்.
அதே நேரத்தில், இந்திய ஆதரவு கொள்கை உள்ளவர். அமெரிக்க பார்லிமென்டில் இந்தியாவுக்கான குழுவின் துணை தலைவராக உள்ளார். கடந்தாண்டு இந்தியாவுக்கு வந்த வால்ட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகள், திட்டங்களை வெகுவாக பாராட்டினார். மேலும், மோடியை நேரில் சந்தித்து வாழ்த்தும் தெரிவித்தார்.
இந்திய வம்சாவளி
இதற்கிடையே, இந்திய வம்சாவளியான தொழிலதிபர் விவேக் ராமசாமி, புதிய நிர்வாகத்தில் வெளியுறவுத் துறை அமைச்சராக நியமிக்கப்படுவார் என, பரவலாக பேசப்பட்டது.
ஆனால், தற்போது செனட் சபை எம்.பி.,யான மார்கோ ரூபியோவுக்கு அந்தப் பொறுப்பு கொடுக்கப்படலாம் என, கூறப்படுகிறது. இதனால், விவேக் ராமசாமிக்கு வேறு ஏதாவது முக்கிய பதவி வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.