சிங்கப்பூரில் ஆடம்பர பொருட்களுக்கு அதிக செலவு; இந்தியர்கள் முதலிடம்
சிங்கப்பூரில் ஆடம்பர பொருட்களுக்கு அதிக செலவு; இந்தியர்கள் முதலிடம்
ADDED : டிச 15, 2025 02:28 PM

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் ஆடம்பர பொருட்களை வாங்க அதிகம் செய்ததில் இந்திய சுற்றுலாப் பயணிகள் முதலிடத்தில் உள்ளனர்.
சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் வெளியிட்ட தகவலின்படி, 2025ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் சிங்கப்பூரில் 5 ஆயிரத்து 700 கோடி ரூபாயை இந்திய சுற்றுலாப் பயணிகள் செலவழித்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 4.40 சதவீதம் அதிகமாகும். இந்தியர்களைப் போன்றே, சீனா மற்றும் இந்தோனேசியா நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளும் சிங்கப்பூரில் ஆடம்பர பொருட்களுக்காக அதிகம் செலவழிக்கின்றனர்.
சிங்கப்பூரின் மிகப்பெரிய வர்த்தக சந்தையான ஆர்ச்சர்டு ரோடு வர்த்தக சங்கத்தினர் கூறுகையில், ' எங்களின் வர்த்தகப் பகுதிகள் இந்தியர்களுக்கு தொடர்ச்சியான மிகப்பெரிய வர்த்தக சந்தையாக திகழ்ந்து வருகிறது. சிங்கப்பூரில் ஆடம்பரப் பொருட்களுக்கு அவர்கள் அதிகம் செலவிடுகிறார்கள். அதேபோல, முன்பை விட தற்போது நீண்ட நாட்கள் இங்கு தங்கி பொழுதை கழிக்கின்றனர். இதனால், உணவகம், பொழுதுபோக்கு, சுற்றுலா தலங்கள் மற்றும் விடுதி என அவர்களின் பிற செலவுகளும் அதிகரிக்கிறது,' என்றனர்.
இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் சிங்கப்பூருக்கான இந்திய பார்வையாளர்களின் வருகை 10 லட்சத்து 30 ஆயிரமாக அதிகரித்துள்ளதாக சிங்கப்பூர் சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. இது கடந்தாண்டை விட 2.6 சதவீதம் அதிகமாகும். ஒட்டுமொத்தமாக ஜனவரி முதல் அக்டோபர் வரையில் ஒரு கோடியே 42 லட்சம் சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூருக்கு வந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 2.5 சதவீதம் அதிகம்.

