கண்டிப்பாக நல்லது நடக்கும்; டிரம்ப் வெற்றிக்காக யாகம் நடத்திய இந்திய கிராமம்
கண்டிப்பாக நல்லது நடக்கும்; டிரம்ப் வெற்றிக்காக யாகம் நடத்திய இந்திய கிராமம்
ADDED : நவ 06, 2024 10:28 PM

ஹைதராபாத்: அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப்பின் குடியரசு கட்சி வெற்றி பெற்றதை இந்தியாவில் உள்ள ஒரு கிராமமே கொண்டாடியிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், ஜனநாயகக் கட்சி வேட்பாளருமான கமலா ஹாரிஸை தோற்கடித்து, 2வது முறையாக அதிபராக வெற்றி பெற்றுள்ளார் டிரம்ப். இதன்மூலம், அமெரிக்காவின் 47வது அதிபராக ட்ரம்ப் தேர்வாகி உள்ளார். வெற்றி பெற்ற பிறகு ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றி டிரம்ப், தனது கட்சியைச் சேர்ந்த ஜேம்ஸ் டேவிட் வான்ஸ்சையும், அவரது மனைவி உஷா சிலுக்குரியையும் மேடையில் அறிமுகம் செய்து பாராட்டினார். மேலும், டேவிட் ஜேம்ஸ் வாம்ஸை துணை அதிபராகவும் அறிவித்தார்.
ஓஹியோ மாகாணத்தின் செனட்டராக இருந்த வான்ஸ், யேல் சட்டப்பள்ளியில் படிக்கும்போது உஷாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். துணை அதிபர் ஆகும் வான்ஸ் மனைவி உஷா இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். ஆந்திராவின் வட்லுரு கிராமம்தான் அவரது மூதாதையர்களின் பூர்வீகம். அமெரிக்காவின் வெள்ளையர் அல்லாத முதல் இரண்டாவது பெண்மணி என்ற சிறப்பை பெறவுள்ளார். தற்போதைய துணை அதிபர் கமலா ஹாரிஸும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்தான். நடந்து முடிந்த தேர்தலில் அதிபர் ஆகும் வாய்ப்பை அவர் இழந்த நிலையில், மற்றொரு இந்திய வம்சாவளியை சேர்ந்த உஷா வெள்ளை மாளிகைக்கு செல்ல உள்ளார்.
இந்த நிலையில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த உஷாவின் கணவர் அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள நிலையில், டிரம்ப்பின் வெற்றியை ஆந்திராவின் வட்லுரு கிராம மக்கள் உற்சாகமாக கொண்டாடியுள்ளனர். மேலும், டிரம்ப் வெற்றி பெற கோவில்களில் யாகம் நடத்தி, சிறப்பு பிரார்த்தனைகளையும் செய்துள்ளனர்.
இது தொடர்பாக அந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கூறும் போது, நாங்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியனும் உஷாவை நினைத்து பெருமைப்பட வேண்டும். இந்திய வம்சாவளியான உஷா, தனது பூர்வீக கிராமத்திற்கு ஏதாவது நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. முதன்முதலாக அவரது தாத்தா தான் வட்லுரு கிராமத்தில் இருந்து வெளியேறிச் சென்றார். உஷாவின் தந்தை சென்னையில் பி.எச்.டி., படித்து முடித்தார்.
இதுவரை சொந்த கிராமத்திற்கு உஷா வந்ததில்லை. ஆனால், அவரது தந்தை 3 ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்துள்ளார். இங்குள்ள கோவில்களின் நிலையை பார்த்துள்ளார். டிரம்ப்பின் ஆட்சியை இதுக்கு முன்பே பார்த்துள்ளோம். சிறப்பாக இருந்தது. அவரது ஆட்சியின் போது, இந்தியா - அமெரிக்கா இடையிலான உறவுகள் சுமூகமாக இருந்தது, எனக் கூறினார்.