வெளிநாடுகளில் 300 சதவீதம் அதிகம் சம்பாதிக்கும் இந்தியர்கள்
வெளிநாடுகளில் 300 சதவீதம் அதிகம் சம்பாதிக்கும் இந்தியர்கள்
UPDATED : செப் 26, 2024 09:27 AM
ADDED : செப் 26, 2024 12:44 AM

வாஷிங்டன்: நம் நாட்டில் இருந்து வேலைக்காக வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு 100 முதல் 300 சதவீதம் வரை சம்பள உயர்வு கிடைப்பதாகவும், இதை அவர்கள் உள்ளூரில் பெறுவதற்கு 20 ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என உலக வங்கி கூறியுள்ளது.
புலம்பெயர்ந்தோர் குறித்த உலக வங்கியின் சமீபத்திய அறிக்கை:
உலகம் முழுதும் 18.4 கோடி பேர் வாழ்வாதாரத்திற்காக புலம்பெயர்ந்துள்ளனர். அவர்களில் 3.7 கோடி பேர் அகதிகள். புலம்பெயர்ந்தவர்களில் இந்தியாவில் இருந்து அமெரிக்கா மற்றும் அரபு நாடுகளுக்கு சென்றவர்கள் அதிகம்.
அரபு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து அங்கு டிரைவர், கட்டுமானப் பணி, டெலிவரி, வீட்டு வேலை போன்ற குறைந்த திறன் தேவைப்படும் பணியில் ஈடுபடும் இந்தியத் தொழிலாளர்கள் இங்கு கிடைப்பதை விட, 118 சதவீதம் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். ஐக்கிய அரபு எமிரேட்சில் வேலை செய்யும் இந்தியர்கள், 298 சதவீதம் அதிக வருவாய் பெறுகின்றனர்.
அந்த வருவாயில் 85 சதவீதத்தை அவர்கள் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கின்றனர். அந்த பணம் இங்கு செலவிடப்படுகிறது.
இதே போல் அமெரிக்காவில் திறன் குறைந்த பணிகளில் உள்ள இந்தியர்களின் வருமானம், 500 சதவீதம் உயர்ந்துள்ளது. தொழில் வாய்ப்புகள், வாழ்க்கைத் தரம், குழந்தைகளின் கல்வி வாய்ப்புகள், சமூகப் பாதுகாப்பு ஆகியவை, இந்தியர்கள் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்வதற்கு காரணமாக உள்ளன.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.